விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அமைதியாக நடந்தது. இதில், 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி திமுக எம்எல்ஏ புஜேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல், ஜூலை, 10ல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்தது.தேர்தல் அறிவிப்புக்கு பின், விக்கிரவாண்டி தொகுதியை உள்ளடக்கிய, விழுப்புரம் மாவட்டத்தில், ஜூன், 10ல், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
வேட்புமனு தாக்கல் ஜூன் 14ம் தேதி தொடங்கியது.மனுக்கள் 24ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டன. கடந்த 26ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. மொத்தம் தாக்கல் செய்யப்பட்ட 64 மனுக்களில் 35 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 29 மனுக்கள் ஏற்கப்பட்டன. இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அதிமுக அறிவித்துள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. பரபரப்பான பிரசாரம் கடந்த 8ம் தேதி மாலையுடன் முடிவுக்கு வந்தது.
இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. முதல்முறை வாக்காளர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அனைவரும் வரிசையில் நின்று ஆர்வமுடன் வாக்களித்தனர். பதற்றமான மையங்கள்: மிகவும் பதற்றமான மையங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள ராதாபுரம், குண்டலபுலியூர், பனையபுரம் ஆகிய கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக, ஒட்டன்காடுவெட்டி, காணை வாக்குச்சாவடிகளில் ஒரு மணி நேரமும், கருங்காலிப்பட்டு, கல்பட்டு, மாம்பாஸ்பட்டு, பொன்னங்குப்பம் ஆகிய வாக்குச்சாவடிகளில் அரை மணி நேரமும் தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அன்னியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் வாக்களித்தனர்.
சலசலப்பு சம்பவங்கள்: விக்கிரவாண்டி அடுத்த வி.சாலை மாதிரி வாக்குச்சாவடியில் ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தகராறு ஏற்பட்டு, இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டர் சுற்றளவில் கடைகள் திறக்க அனுமதிக்கப்படாத நிலையில், மைதானத்தில் பால் கடை திறக்கப்பட்டிருந்தது. அதை மூடுமாறு போலீசார் கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார் 2 பேரை தாக்கியதால், அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாமக வேட்பாளரின் சொந்த ஊரான பனையபுரம் வாக்குச்சாவடி அருகே திமுகவினர் ஆதரவு திரட்டுவது போல் அமர்ந்திருந்தனர். இதற்கு பாமகவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், வாக்குவாதம் ஏற்பட்டது. திமுகவினர் அமர்ந்திருந்த பிளாஸ்டிக் நாற்காலிகள் உடைக்கப்பட்டன. விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குச்சாவடி அலுவலர் பிரபாகரன் குளவி கொட்டுக்கு இலக்கானார். இதனால் சிறிது நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் குளவி கூட்டை அகற்றிய பிறகு, வாக்குப்பதிவு தொடர்ந்தது.
மாலை 6 மணிக்கு மேல்.. காப்பியம்புலியூர், வாக்கூர், உலகம்பூண்டி, ஓடங்காடுவெட்டி ஆகிய 4 வாக்குச்சாவடிகளில் 6 மணிக்கு வரிசையில் நின்ற மொத்தம் 308 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குப்பதிவு நடந்தது. 6 மணிக்கு மேல் வந்தவர்களுக்கு வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டது.
இதையடுத்து, 276 வாக்குச் சாவடிகளிலும் சீல் வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கொண்டு செல்லப்பட்டன. வாக்கு எண்ணிக்கை வரும் 13ம் தேதி நடக்கிறது. இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 99 ஆயிரத்து 944 பெண் வாக்காளர்கள் உள்பட 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர்.
நாடு முழுவதும் 13 தொகுதிகளில் இடைத்தேர்தல்: புதுடெல்லி: தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்பட 7 மாநிலங்களில் மொத்தம் உள்ள 13 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடந்தது. விக்கிரவாண்டியில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மற்ற மாநிலங்களில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகள் மற்றும் மாலை 5 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விவரம்:
மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச் (67.12%), ரனாகத் தக்சின் (65.37%), பாக்தா (65.15%), மணிக்தலா (51.39%) ஆகிய 4 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதேபோல், பீகாரின் ரூபாலி (51.14%), பஞ்சாபின் ஜலந்தர் மேற்கு (51.3%), இமாச்சலப் பிரதேசத்தின் டெஹ்ரா (63.89%), ஹமிர்பூர் (65.78%), நலகர் (75.22%), உத்தரகாண்டின் பத்ரிநாத் (47.68%), மங்களூர் (67.28%), மத்திய பிரதேசத்தில் அமர்வாரா (72.89%) தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது.