மீனம்பாக்கம்: ஒவ்வொரு சனிக்கிழமையும் நள்ளிரவு 1.50 மணிக்கு மொரீஷியஸில் இருந்து ஏர் மொரீஷியஸ் பயணிகள் விமானம் சென்னை வருகிறது. பின்னர் அதே விமானம் அதிகாலை 3.35 மணிக்கு பயணிகளுடன் மொரீஷியஸுக்கு புறப்படுகிறது. மொரீஷியஸில் உள்ள மருத்துவம் மற்றும் பொறியியல் தொடர்பான பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு உட்பட பல்வேறு தென்னிந்திய மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
மேலும், மொரீஷியஸ் சுற்றுலாத் தலமாக இருப்பதால், ஏராளமானோர் வருகை தருவது வழக்கம். இந்நிலையில் வழக்கம் போல் இன்று அதிகாலை 1.50 மணிக்கு சென்னைக்கு வர வேண்டிய ஏர் மொரீஷியஸ் பயணிகள் விமானம் நீண்ட நேரமாகியும் வரவில்லை. அந்த விமானத்தில் ஏற 277 பயணிகள் காத்திருந்தனர். மொரீஷியஸில் நேற்று பலத்த காற்றுடன் மோசமான வானிலை காரணமாக, விமானம் சென்னைக்கு வரவில்லை.
இதனால், வருகை மற்றும் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. இந்த விமானம் இன்று இரவு புறப்பட்டு நாளை அதிகாலை சென்னை வந்தடையும். அதன்பின்னர் வழக்கமான நேரத்தில் பயணிகள் மொரீஷியஸ் புறப்பட்டுச் செல்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த தகவல் கிடைக்காத பயணிகள் பலர் விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். நாளை வந்து பயணம் செய்யும்படி அறிவுறுத்தினர். அதே சமயம், இயற்கையால் ஏற்படும் பாதிப்புகளை எதுவும் செய்ய முடியாது என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் மொரீஷியஸ் நாட்டின் முன்னாள் துணை அதிபர் பரமசிவம் வையாபுரி இன்று மொரீஷியஸில் இருந்து விமானம் மூலம் சென்னை வரவிருந்தார். இன்று விமான சேவை ரத்து செய்யப்பட்டதால், அவரது சென்னை பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.