விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள குளங்களில் இந்தாண்டு மீன்பிடி திருவிழா துவங்கியுள்ளதால் மீன் பிரியர்களும், பொதுமக்களும் உற்சாகமடைந்துள்ளனர். அந்த வகையில் விராலிமலை அருகே உள்ள திருநல்லூர் பெரிய குளத்தில் நேற்று காலை பாரம்பரிய மீன்பிடி திருவிழா நடந்தது. ஊர் பெரியவர்கள் துண்டை தூக்கி மீன்பிடிக்க ஆரம்பித்தனர். அப்போது, அதிகாலையில் இருந்தே கரையில் காத்திருந்த இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு குளத்தில் இறங்கி கம்பி, வலை உள்ளிட்ட உபகரணங்களுடன் மீன்பிடித்தனர்.
வைரல், கெண்டை, கெளுத்தி, கட்லா, குரவை உள்ளிட்ட நாட்டு மீன்களை மகிழ்ச்சியுடன் பிடிக்க வந்த மீனவர்களுக்கு மீன்கள் ஏதும் சிக்காமல், முள் செடிகள், பாசிகள் மட்டுமே கிடைத்தன. வழக்கமாக மீன்பிடி திருவிழாவின் போது ஒரு குளத்தில் சுமார் 100 முதல் 300 கிலோ மீன்கள் பிடிக்கப்படும். ஆனால், சுமார் 25 கிலோ மீன் மட்டுமே பிடிபட்டது. இதனால், அதிகாலை முதல் மீன்பிடித்தவர்கள் மீன்கள் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.