சென்னை : சப்தம் படத்தில் நடித்தபோது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது என்று நடிகர் ஆதி தெரிவித்துள்ளார்
மிருகம் படத்தில் அறிமுகமாகி தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல கதாநாயகனாக இருப்பவர் ஆதி. இவரது நடிப்பில் சப்தம் என்ற திகில் படம் நேற்று வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சினிமாவை பொறுத்தவரை தமிழ், தெலுங்கு என நான் பிரித்து பார்ப்பதில்லை. கதையைதான் பார்ப்பேன்.
எல்லா கதாநாயகர்களுடனும் வில்லனாக நடிக்க ஆசை இருக்கிறது.எல்லா வில்லனுடனும் கதாநாயகனாக நடிக்க ஆசை இருக்கிறது. டைரக்ஷன் என்பது அழுத்தமான பணி. நடிகராகவே வண்டியை ஓட்டி விடுவோமே. சப்தம் படத்தில் நடித்தபோது நிறைய அமானுஷ்ய விஷயங்கள் நடந்தது.
சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நான், லைலா, அறிவழகன் பேசிக் கொண்டிருந்தபோது கூட லைட் ஆடிக்கொண்டே இருந்தது. இப்படி பல விஷயங்கள் அடிக்கடி நடந்ததால் ஈசியாக நினைக்க தோன்றிவிட்டது.
கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்பும்போது பேய் இருக்கலாம் என்று நம்ப தோன்றுகிறது. கதாநாயகிகளுடன் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு திருமணத்திற்கு முன்பு யாருடைய அனுமதியும் தேவை இல்லை.
திருமணத்திற்கு பிறகு அப்படிப்பட்ட காட்சிகளுக்கு பொண்டாட்டியோட அனுமதி தேவை. அப்படி அனுமதி வாங்கி கொண்டால் வீட்டில் சண்டை இருக்காது. எல்லா படத்தின் கதை பற்றியும் மனைவியுடன் கலந்து பேசி ஆலோசனை செய்வேன்.
ஆனால் முடிவு நான் எடுப்பதுதான். இந்த வருடம் தமிழ் சினிமாவில் என்னுடைய நடிப்பில் பல படங்கள் வர இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.