சென்னை: சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 3 வழித்தடங்களில், 116.1 கி.மீ., தூரத்திற்கு செயல்படுத்தப்படுகிறது. இதில் ஒன்று கலங்கரை விளக்கத்தில் இருந்து பூந்தமல்லி பைபாஸ் செல்லும் 4-வது வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கத்தில் இருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் வரை நிலத்தடி பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்த்தப்பட்ட பாதையும் அமைக்கப்படும். 9 நிலத்தடி மெட்ரோ நிலையங்களும், 18 உயர்த்தப்பட்ட மெட்ரோ நிலையங்களும் அமைக்கப்படும். தற்போது பல்வேறு இடங்களில் நிலத்தடி மற்றும் மேம்பாலப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், போரூர் – பூந்தமல்லி இடையே 9 கி.மீ., துாரமுள்ள வழித்தடத்தில் எஸ்கலேட்டர், லிப்ட் அமைக்கும் பணி துவங்கியுள்ளது. சென்னையில் தயாரிக்கப்பட்ட 40 லிப்ட்களையும், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 60 எஸ்கலேட்டர்களையும் மெட்ரோ ரயில் அதிகாரிகள் வாங்கியுள்ளனர். இதை இந்த வழித்தடத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் கழக அதிகாரிகள் கூறியதாவது:-
பூந்தமல்லி – போரூர் வழித்தடத்தில், பயணிகள் எளிதாக செல்ல, அனைத்து இடங்களிலும் லிப்ட் அமைக்கப்படும். மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் செய்ய வசதிகள் செய்து தரப்படும். புதிய எஸ்கலேட்டர்கள் கொண்ட முதல் ரயில் நிலையம் போரூர் பைபாஸ் மெட்ரோ ரயில் நிலையம் ஆகும். தற்போது லிப்ட் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகள் செப்டம்பரில் முடிவடையும். இது தவிர காட்டுப்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம், தெள்ளியகரம் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை அடுத்ததாக மேம்படுத்தப்படும். இவ்வாறு கூறினார்கள். இந்த வழித்தடத்தில் முல்லைத்தோட்டம் – கரையான்சாவடி ரயில் நிலையங்களுக்கு இடையிலான மேம்பாலப் பணிகள் நேற்றுமுன்தினம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.