திருத்தணி : திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை, அத்திமாஞ்சேரிப்பேட்டை, புச்சிரெட்டிப்பள்ளி, சொரக்காய்பேட்டை, அம்மையார்குப்பம், ஆர்.கே.பேட்டை, ஸ்ரீகாளிகாபுரம், விடியங்காடு, வங்கனூர், மத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களின் வாழ்வாதாரமாக நெசவுத் தொழில் உள்ளது. இப்பகுதியில் உள்ள நெசவாளர்கள் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறியில் லுங்கிகளை உற்பத்தி செய்கின்றனர்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்விற்கு ஏற்ப குறைந்தபட்ச கூலியை உயர்த்தக் கோரி, தோல், நூல் மொத்த விற்பனை முகவர்களிடம் மீட்டர் கணக்கில் கூலி பெறும் நெசவாளர்கள், கடந்த மாதம் 17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 14 நாட்களாக நடைபெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தால் லுங்கி உற்பத்தி முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால், நெசவாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்கள் பல நாட்களாக வேலைநிறுத்தம் செய்தும், மொத்த விற்பனை முகவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வராதது, நெசவாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெசவாளர்கள் போராட்டம் குறித்து மொத்த வியாபாரிகள் கூறியதாவது:- 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி உயர்வு பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு எட்டுவது வழக்கம். இந்நிலையில் கடந்த ஆண்டு நெசவாளர்களுக்கும், மொத்த வியாபாரிகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்ட போதிலும் கூலி உயர்வு கேட்டு மீண்டும் போராட்டம் நடத்தி வருகின்றனர். தாங்கள் உற்பத்தி செய்த லுங்கிகள் தேக்கமடைந்து விற்பனை இல்லாததால் கூலியை உயர்த்த முடியாத நிலை உள்ளது என்றனர். தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நெசவாளர்கள், குறைந்தபட்ச ஊதிய உயர்வு பிரச்னையில் அரசு தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னை கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல உள்ளதாக தெரிவித்தனர்.