சமந்தாவின் வெப் சீரிஸ் ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ கடந்த ஆண்டு வெளியானது. தற்போது தெலுங்கில் ‘மா இண்டி பங்காரம்’ என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார். மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தற்போது அதில் இருந்து மீண்டு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். சமந்தா சினிமாவில் 15 வருடங்களை நிறைவு செய்துள்ளார். இதை முன்னிட்டு சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தனது 15 ஆண்டுகால திரையுலக வாழ்க்கை ஆசிர்வதிக்கப்பட்டதாக கூறினார். அவர் கூறியதாவது:-
முதல் படமான ‘மாஸ்கோவின் காவிரி’யில் எனது நண்பர் ராகுல் ரவீந்திரனுடன் நடித்தேன். அந்தப் படத்தைப் பற்றிய நினைவுகள் எனக்கு அதிகம் இல்லை. அடுத்த படமான ‘யே மாய சேசவே’ (விண்ணைத் தாண்டி வருவாயா – தெலுங்கு பதிப்பு) படத்தின் ஒவ்வொரு ஷாட்டும் இன்னும் என் நினைவில் இருக்கிறது. சினிமாவில் பதினைந்து ஆண்டுகள் என்பது நீண்ட காலம். இப்போது நான் நடித்த சில படங்களைப் பார்க்கும்போது, நான் இவ்வளவு மோசமாக நடித்திருக்கிறேன் என்று உணர்கிறேன்.
ஆனால் அப்படித்தான் கற்றுக்கொண்டேன். சினிமாவில் எனக்கு வழிகாட்ட யாரும் இல்லை. எனக்கு வேறு மொழிகள் கூட தெரியாது. நான் எல்லாவற்றையும் புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. திரையுலகில் எனக்கு நண்பர்கள் இல்லை, தொடர்புகள் இல்லை, உறவினர்கள் இல்லை. எல்லாம் புதிதாக இருந்தது, பின்னர் நான் வேலையை கற்றுக்கொண்டேன். இந்த 15 வருடங்கள் கற்றல் அனுபவம். இப்போது எனது பலம் மற்றும் பலவீனம் எனக்குத் தெரியும், எனவே அடுத்த 15 வருடங்களை எதிர்நோக்குகிறேன். இவ்வாறு சமந்தா கூறினார்.