தெலங்கானா : தெலங்கானா சுரங்கத்தில் சிக்கிய 8 பேரின் சடலங்களை மீட்க முடியாமல் மீட்பு குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
ஸ்ரீசைலம் இடதுகரை கால்வாய் திட்டத்திற்காக எஸ்எல்பிசி சுரங்கம் தோண்டப்பட்டது. ஸ்ரீ சைலம் முதல் நல்கொண்டா வரை செயல்படுத்தப்படும் இக்கால்வாய் திட்டத்தில் 14 கி.மீ சுரங்கம் தோண்டப்பட்டது. கடந்த 10 நாட்களுக்கு முன் சுரங்கத்தில் உள்ள மேற்கூரை திடீரென சரிந்ததால் 8 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி கொண்டனர்.
இவர்களை மீட்க இந்திய ராணுவப்படை, பேரிடர் மீட்பு குழு, தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் என இரவும், பகலுமாக தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சுரங்கத்தில் சிக்கிகொண்டவர்களை மீட்க ராடார் கருவிகள், ட்ரோன்கள் உபயோகப்படுத்தப்பட்டன. ஜிபிஆர் கருவி மூலம் ஸ்கேன் செய்ததில் ஒரு இடத்தில் 4 தொழிலாளர்கள் மற்றொரு இடத்தில் மேலும் 4 தொழிலாளர்கள் சடலமாக இருப்பதை கண்டறிந்தனர்.
ஆனால், சடலங்களை மீட்க நேற்று வரை முடியவில்லை. சேறுகளை ஒருபுறம் அகற்றினாலும், மறுபுறம் தண்ணீர் வரத்து இருப்பதால் சடலங்களை அங்கிருந்து வெளியே கொண்டு வர முடியாமல் பேரிடர் மீட்பு குழுவினர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
நேற்று சுரங்கத்திற்குள் புதிய கன்வேயர் பெல்ட்டை அனுப்பி, சேற்றையும், சகதியையும் விரைவாக வெளியேற்ற முயற்சிகளை மேற்கொண்ட னர். இதனால், ஓரிரு நாட்களில் 8 பேரின் சடலங்களையும் மீட்டு விடலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.