ஊட்டி: நீலகிரி மாவட்டத்தை பிற சமவெளி மாவட்டங்களுடன் இணைக்கும் முக்கிய சாலையாக கூடலூர் – ஊட்டி – மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதனால் இச்சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து இருக்கும். ரோடு விரிவாக்கம் செய்யப்படாததால், சீசன் காலத்தில் அதிகளவில் வாகனங்கள் செல்வதாலும், சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பதாலும் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக இருந்தது.
இந்த சாலையை விரிவாக்கம் செய்ய திட்டம் தயாரிக்கப்பட்டு ரூ. 138 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. குறுகலான பகுதிகளில் தடுப்புச் சுவர்கள் கட்டுதல், பாலங்கள் அகலப்படுத்துதல் என பல்வேறு வளர்ச்சிப் பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. குன்னூர் – ஊட்டி இடையேயான 14 கி.மீ., ரோட்டில், பல இடங்களில், பாதாள மழைநீர் வடிகால் மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், ஓராண்டுக்கு மேலாகியும் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை.

அருவங்காடு முதல் பாய்ஸ் கம்பெனி வரை சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு ஜல்லி, மணல் கொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால் தார் சாலை அமைக்கப்படாததால் கடந்த பருவமழையில் அடித்து செல்லப்பட்டு குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் சீராக வாகனங்களை இயக்க முடியாமல் சிரமப்படுகின்றனர். இதனால், சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது.
இதேபோல் குன்னூர் – மேட்டுப்பாளையம் இடையே பல இடங்களில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அவை இருப்பது தெரியாததால், வேகமாக செல்லும் வாகனங்கள் தடுமாறி விழும் நிலை உள்ளது. இரு சக்கர வாகன ஓட்டிகளும் தவறி விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இது தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எனவே, மந்தகதியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து முடித்து, ஊட்டி – குன்னூர் இடையே உள்ள சாலையை சீரமைக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.