இன்றும் பல சமூகங்களில் பெண்களை குறைத்து மதிக்கும் மனநிலை முற்றிலும் போக்கப்படவில்லை. பெண்களின் முக்கியத்துவத்தையும் அவர்களின் சாதனைகளை பாராட்டவும், மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளை மகளிரின் பொதுவான உரிமைகள், சமத்துவம் மற்றும் உரிமைப் பாதுகாப்பு குறித்து உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நாளாக கருதப்படுகிறது.
மகளிர் தினம் 1975ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும், இதற்கான விதைகள் 1850-களில் விதைக்கப்பட்டுள்ளன. பெண்கள் வேலை இடங்களில் ஊதியப் பாகுபாடு, நீண்ட நேர வேலை மற்றும் உரிமை மறுப்பு போன்றவற்றுக்கு எதிராக போராடி வந்தனர். 1910ஆம் ஆண்டு, டென்மார்க்கின் கோபன்ஹேகன் நகரில் நடந்த ஒரு உரிமை மாநாட்டில் பல்வேறு நாடுகளின் பெண்கள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் பெண்களின் உரிமைகளை வலியுறுத்தி, அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது ஆகும்.
இந்த மாநாட்டில் முக்கியமான தலைவர்களில் ஒருவர் ஜெர்மனியைக் சேர்ந்த கிளாரா ஜெட்கின். பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்த அவர், ஒரு குறிப்பிட்ட நாளை மகளிர் தினமாக உறுதிப்படுத்த வேண்டும் என்று முன்மொழிந்தார். ஆனால் பல நாடுகளில் வெவ்வேறு தேதிகளில் மகளிர் தினம் கொண்டாடப்பட்டதால், பொதுவான ஒரு நாளை தேர்வு செய்வது சாத்தியமாகவில்லை.
1917ஆம் ஆண்டு, ரஷ்யாவில் பெண் தொழிலாளர்கள் முன்னெடுத்த மிகப்பெரிய புரட்சியினால் அந்த நாட்டின் ஆட்சி மாறியது. 1920ஆம் ஆண்டு, செயிண்ட் பீட்டர்ஸ்பேர்க் நகரில் பெண்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தொடங்கிய நாள் ரஷ்யாவின் ஜூலியன் நாட்காட்டியின் படி பிப்ரவரி 23, ஆனால் கிரிகோரியன் நாட்காட்டியில் இது மார்ச் 8ஆம் தேதியாக மாறியது. இதுவே தற்போது சர்வதேச மகளிர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
மகளிர் தினம் வெறும் ஒரு கொண்டாட்ட நாளாக அல்ல; இது பெண்கள் சமத்துவத்திற்காகவும், அவர்களுக்கு எதிராக இருக்கும் சமூக பாரம்பரியப் பாகுபாடுகளை முறியடிக்கவும் முக்கியமான நாளாக அமைந்துள்ளது.