ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் திருமண கொண்டாட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், அம்பானி வீட்டில் நடக்கும் திருமணத்திற்கு எத்தனை ஆயிரம் கோடி செலவாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் மனைவி நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் இன்று நடைபெற உள்ளது. இந்த திருமணம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
திருமண கொண்டாட்டங்கள் கடந்த புதன்கிழமை மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான ஆன்டிலியாவில் மாமேரு விழாவுடன் தொடங்கியது, மேலும் இந்த ஜோடியின் பிரமாண்ட திருமண விழா இன்று மும்பையில் உள்ள ஜியோவில் நடைபெறுகிறது. இந்த திருமண விழாவையொட்டி அம்பானி குடும்பத்தினர் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். அதன்படி, கடந்த மார்ச் மாதம் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் முதல் திருமணத்திற்கு முந்தைய சடங்குகள் நடைபெற்றன.
இந்த பரபரப்பான நிகழ்ச்சியில் இந்திய திரையுலக பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் ஆடம்பர கப்பலில் 2வது திருமணத்திற்கு முந்தைய விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதையடுத்து ஆனந்த்-ராத்திகா திருமண கொண்டாட்டங்கள் மும்பையில் கடந்த வார இறுதியில் தொடங்கியது.
அம்பானி வீட்டு திருமண விழா சங்கேத் , ஹல்டி மற்றும் பாரம்பரிய பூஜைகளுடன் நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் சல்மான் கான், ஜான்வி கபூர், சாரா அலி கான், அனன்யா பாண்டே, ஓர்ஹான் அவத்ரமணி, போனி கபூர், ஷிகர் பஹாரியா, ராகுல் வைத்யா, உதித் நாராயண் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் இதனை தொடர்ந்து நடைபெற்ற ஹல்தி திருவிழாவில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அம்பானி வீட்டு திருமண செலவு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஃபோர்ப்ஸ் படி, முழு திருமண கொண்டாட்டங்கள் ரூ. 4,000-5,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அம்பானி குடும்பத்தின் நிகர மதிப்பில் வெறும் 0.5 சதவீதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. அம்பானி வீட்டு திருமணத்திற்கு பாலிவுட் நட்சத்திரங்கள், தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் சர்வதேச பிரமுகர்கள் என பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கபூர், சித்தார்த் மல்ஹோத்ரா, கியாரா அத்வானி, ஷாஹித் கபூர், விக்கி கவுஷல் மற்றும் பலர் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தாக்கரே குடும்பம், தேவேந்திர ஃபட்னாவிஸ், ஏக்நாத் ஷிண்டே போன்ற முக்கிய அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அம்பானி இல்ல திருமண விழாவில் பிரதமர் மோடியும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. அதேபோல் அம்பானி குடும்பம் சர்வதேச பிரபலங்களுக்கு தனி விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, சாம்சங் சிஇஓ ஹான் ஜாங் ஹீ, இங்கிலாந்து முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்ட சர்வதேச பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர். மேலும் ஆனந்த்-ராத்திகா திருமணத்தில் கிம் கர்தாஷியன், க்ளோ கர்தாஷியன், ஜான் சினா உள்ளிட்ட பல ஹாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அம்பானி இல்ல திருமண விழா 3 நாட்கள் நடைபெற உள்ளது. இன்று திருமணம், ஜூலை 13ம் தேதி ஆசீர்வாத விழாவும், ஜூலை 14ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.