புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் சிவபுரியில் உள்ள மாதவ் தேசிய பூங்கா புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மோகன் யாதவ் நாளை திறந்து வைக்கிறார். இது மாநிலத்தின் 9-வது புலிகள் காப்பகமாகும். மாதவ் தேசியப் பூங்கா 1956-ல் நிறுவப்பட்டது. மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் தந்தையும் மறைந்த காங்கிரஸ் தலைவருமான மாதவ் ராவ் சிந்தியாவின் பிறந்தநாளான நாளை, மாதவ் தேசியப் பூங்கா புலிகள் காப்பகமாக மீண்டும் உருவாக்கப்படும்.
முன்னதாக, சத்புரா, பெஞ்ச், பந்தவ்கர், கன்ஹா, சஞ்சய் துப்ரி, பன்னா, ராணி துர்காவதி மற்றும் ரதபானி புலிகள் காப்பகங்கள் செயல்படுகின்றன. இதையடுத்து, மாதவ் தேசிய பூங்காவை, 9-வது புலிகள் காப்பகமாக அமைக்கும் முயற்சியை, முதல்வர் மோகன் யாதவ், 6 மாதங்களுக்கு முன் துவக்கி வைத்தார். இந்த புலிகள் காப்பகம் 1751 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. இந்த புலிகள் காப்பகத்தில் தற்போது 3 வயது வந்த புலிகளும் 2 குட்டிகளும் உள்ளன. மத்திய பிரதேசத்தில் உள்ள பந்தவ்கர் மற்றும் கன்ஹா புலிகள் காப்பகத்தில் இருந்து தலா ஒரு புலி நாளை மாதவ் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு வரப்படுகிறது.

மத்திய பிரதேச அரசின் இந்த முயற்சியை பாராட்டி, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ், நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டிருந்தார். அதில், “பூமியின் சுற்றுச்சூழல் பன்முகத்தன்மையை மீட்டெடுக்க பிரதமர் நரேந்திர மோடி அளித்த வரலாற்று முக்கியத்துவம் காரணமாக சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பில் இந்தியா தொடர்ந்து முன்னேறி வருகிறது. இதில் மத்திய பிரதேசத்தின் மாதவ் புலிகள் காப்பகமும் இணைந்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது மத்திய பிரதேசத்தில் உள்ள 9-வது புலிகள் காப்பகம் ஆகும். அனைத்து வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பாதுகாவலர்களை நான் வாழ்த்துகிறேன். தன்னலமின்றி இந்த நோக்கத்திற்காக உழைக்கும் நமது வனத்துறை அதிகாரிகளின் இடைவிடாத முயற்சிக்கு இந்த வளர்ச்சி ஒரு சான்று.” இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி பூபேந்தர் யாதவின் பதிவை டேக் செய்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார். அதில், “வனவிலங்கு பிரியர்களுக்கு ஆச்சரியமான செய்தி! வனவிலங்கு பன்முகத்தன்மை மற்றும் வனவிலங்குகளை போற்றும் கலாச்சாரத்தால் இந்தியா ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.
விலங்குகளை பாதுகாப்பதிலும், பூமியின் நிலைத்தன்மைக்கு பங்களிப்பதிலும் நாங்கள் எப்போதும் முன்னணியில் இருப்போம்,” என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.