சென்னை: மாற்றுக்கட்சியிலிருந்து வருபவர்களுக்கு பதவியில்லை என மீண்டும் தெரிவித்துள்ளார் தவெக கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்.
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த ஆதார் அர்ஜுனாவுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது.
இந்நிலையில் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சிடி நிர்மல் குமாருக்கும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது. இது சர்ச்சையாக மாறியது. அதாவது தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படும் போது கட்சிக்காக உழைத்த எங்களுக்கு பதவிகள் வழங்கப்படாமல் புதிதாக வந்தவர்களுக்கு பதவிகளை வழங்குவதாக பல நிர்வாகிகள் பரபரப்பு புகாரினை முன் வைத்தனர்.
இது தொடர்பான செய்திகள் கூட வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தமிழக வெற்றிகழகத்திற்காக உழைத்து சைக்கிள் ஓட்டி போஸ்டர் ஒட்டிய தொண்டருக்கு மட்டுமே பதவி வழங்கப்படும் என்று தற்போது கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த கருத்தை அவர் கூறியுள்ள நிலையில் தற்போது நடந்த ஒரு நிகழ்ச்சியிலும் அவர் இதனை தெரிவித்துள்ளார். அதோடு பிற கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தில் எந்த ஒரு பொறுப்புகளும் வழங்கப்படாது என்று கூறினார். மேலும் பிற கட்சிகளில் இருந்து வருபவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படாது என்றால் ஆதவ் அர்ஜுனா மற்றும் சிடி நிர்மல் குமார் ஆகியோருக்கு பொறுப்புகளை வழங்கியது ஏன் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.