துபாய்: இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு அணியின் அனைத்து வீரர்களும் பங்களித்தனர். இந்திய அணி வீரர்கள் லீக் சுற்று முதல் இறுதி வரை பல்வேறு கட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பேட்டிங்கைப் பொறுத்தவரை, அனைத்து முக்கியமான தருணங்களிலும் நம்பமுடியாத பார்ட்னர்ஷிப்களை உருவாக்க ஷ்ரேயாஸ் ஐயர் உதவினார்.
அதேசமயம், இறுதிக்கட்டத்தில் கே.எல்.ராகுல் பதற்றமின்றி நிதானமாக விளையாடிய விதம் வியக்கவைத்தது. முந்தைய தொடர்களில், முக்கியமான தருணங்களில் அழுத்தத்தை சரியாகக் கையாளாததால் இந்திய அணி வெற்றிகளைப் பெறத் தவறியது. ஆனால் இம்முறை இந்திய அணி அழுத்தத்தை உள்வாங்கிக்கொண்டு பதற்றமில்லாமல் விளையாடிய விதம், முழுத் தொடரும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. இந்நிலையில் இறுதிப் போட்டி முடிந்ததும் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கூறியதாவது:-

நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை வென்று நீண்ட நாட்கள் ஆகிறது. இந்த வடிவம் சிறப்பானது. இதுவே எங்களின் நோக்கம். ஆஸ்திரேலியாவில் ஒரு கடினமான சுற்றுப்பயணத்திற்குப் பிறகு, நாங்கள் இங்கு வந்து ஒரு சிறந்த தொடரை வென்றோம். இது ஒரு அணியாக எங்களின் நம்பிக்கையை மீண்டும் அதிகரித்துள்ளது. தொடர் முழுவதும், வெவ்வேறு ஆட்டங்களில் வெவ்வேறு வீரர்கள் ஆட்டத்தை வழிநடத்தினர். கடந்த தொடர்களில் எங்களால் கேம்களை முடிக்க முடியவில்லை அல்லது முக்கிய சூழ்நிலைகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
ஆனால் இந்த முறை அந்த அனுபவங்களிலிருந்து கற்றுக்கொண்டோம். அதனால்தான் அனுபவமிக்க வீரர்களுக்கு ஆதரவளிக்கிறோம். – அவர்கள் ஏற்கனவே இதே போன்ற தருணங்களை எதிர்கொண்டுள்ளனர். அந்த கற்றலைப் பயன்படுத்தி, கடினமாக உழைத்தால், அவர்கள் விஷயங்களை மாற்றுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். கே.எல்.ராகுல் கடைசி இரண்டு போட்டிகளை முடித்த விதமே அந்த அனுபவத்திற்கு சாட்சி. முன்பெல்லாம் இதே போன்ற சூழ்நிலைகளில் இருந்து, வெற்றிக் கோட்டைத் தாண்ட முடியாத போது, இன்னொரு வாய்ப்பு கிடைத்து அதைக் கடக்க வேண்டும் என்ற ஆசை எப்போதும் இருக்கும்.
அதைத்தான் இப்போது செய்தோம். எதிரணி எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை விட, தொடர் முழுவதும் எங்களது திறமையில் மட்டுமே கவனம் செலுத்தினோம். 4 ஐசிசி தொடர்களை வெல்வது உண்மையிலேயே ஒரு ஆசீர்வாதம், இவ்வளவு காலம் விளையாடிய பிறகு அதை சாதித்தது மிகவும் அதிர்ஷ்டமாக உணர்கிறேன். இவ்வாறு விராட் கோலி கூறினார். 2011 50 ஓவர் உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் விராட் கோலியும் இடம் பெற்றிருந்தார்.