வாஷிங்டன்: சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் அமெரிக்க பிரதிநிதிகளுடன் உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு உக்ரைன் அரசு 30 நாள் போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதைத் தொடர்ந்து டிரம்பின் அறிக்கையும் வெளியிடப்பட்டது. இந்த போர்நிறுத்தம் குறித்து டிரம்ப் கூறுகையில், “ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வரும் போர் காரணமாக ராணுவம் மற்றும் பொதுமக்கள் என இரு தரப்பிலும் பலியாகியுள்ளனர்.
அது நிறுத்தப்பட வேண்டும். அதற்கு தற்காலிக போர் நிறுத்தம் மிகவும் அவசியம். இந்தப் போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் ஒப்புக்கொண்டது. ரஷ்யாவும் ஒப்புக் கொள்ளும் என்று நம்புகிறேன். “இந்த போர் நிறுத்தத்தின் அவசியத்தை ரஷ்யா புரிந்து கொண்டு அதை ஏற்றுக் கொள்ளச் செய்தால், அது பெரிய விஷயம். அதைச் செய்ய முடியாவிட்டால், இன்னும் பலர் கொல்லப்படுவார்கள்,” என்று அவர் கூறினார். மூன்றாண்டு கால போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்யாவுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என உக்ரைன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ செய்தியாளர்களிடம் கூறுகையில், “இன்று நாங்கள் உக்ரைனை உடனடியாக அமைதி பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள வற்புறுத்தியுள்ளோம்” என்றார். மேலும், இதுபற்றி X பக்கத்தில் குறிப்பிடும் போது, ”உக்ரைனின் தயார்நிலை மற்றும் பகையை நிறுத்த விருப்பம் ஆகியவை நீடித்த அமைதிக்கு ஒரு படியாகும்.
அமெரிக்க ஜனாதிபதியின் தலைமையில், சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் உதவியுடன், உக்ரைன் அமைதியை மீட்டெடுக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இப்போது அனைத்தும் ரஷ்யாவின் கையில் உள்ளது.” இது மட்டுமின்றி, போர் நிறுத்தத்துக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளதால், உக்ரைனுக்கு இடைநிறுத்தப்பட்ட உளவுத்துறை பகிர்வு மற்றும் பாதுகாப்பு சேவைகளை மீண்டும் தொடங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.