சென்னை: அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே 2025-26-ம் நிதியாண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்கிறார். இதனை முன்னிட்டு மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், “எல்லோருக்கும் எல்லாம்’ என்ற முழக்கத்துடன் 2025-2026-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்வதற்கு முன், நவீன தமிழகத்தை உருவாக்கிய கருணாநிதியின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினேன்.

தமிழக அரசின் 2025-26-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு காலை 9.30 மணிக்கு தாக்கல் செய்கிறார். நிதி அமைச்சராக அவர் தாக்கல் செய்யும் 2-வது பட்ஜெட் இதுவாகும். பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு, இன்று நடைபெறும் அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் பட்ஜெட் மீது எத்தனை நாட்கள் விவாதம் நடத்தப்படும் என்பது குறித்து முடிவு செய்யப்படும். சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
அந்த வகையில் இன்றைய வரவு செலவுத் திட்டம் இந்த அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட 5-வது மற்றும் முழுமையான வரவு செலவுத் திட்டமாகும். இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதுவும் வெளியிட முடியாததால், இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், விடியல் பேருந்து பயணத் திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன், முதல்வர் உரை, மக்களுடன் முதல்வர், காலை உணவுத் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன.