தவெக அமைப்பு ரீதியாக 120 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 95 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்று இறுதி 25 மாவட்ட செயலாளர்களை விஜய் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில், பனையூரில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு நேற்று அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் சென்று நிர்வாகிகளை நேரில் சந்தித்து அவர்களின் பொறுப்புகளை அறிவித்தார்.
இதையடுத்து, 25 மாவட்டங்களுக்கான நிர்வாகிகள் அறிவிக்கப்பட இருந்த நிலையில், கரூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களுக்கு மட்டும் நிர்வாகிகளை விஜய் இறுதி செய்தார். இதில் விஜய்யின் உதவி மகன் சபரிநாதனுக்கு சென்னை தென்மேற்கு மாவட்ட செயலாளராக வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்கு கட்சியினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் நியமனத்திலும் தொடர் காலதாமதம் ஏற்படுவதாகவும், சில மாவட்டங்களில் நியமிக்கப்பட்டவர்களுக்கு எதிராக நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளதாகவும் தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் நிருபர்களிடம் கூறும்போது, ”சபரிநாதனின் தந்தை 35 ஆண்டுகளாக தலைவருடன் பயணம் செய்தார். சபரிநாதனும் சிறுவயதில் இருந்து ரசிகராக இருந்து பெயர் பலகை திறப்பது உள்ளிட்ட பணிகளை செய்துள்ளார். அந்த வகையில் தலைவரின் ரசிகர்களுக்கு பொறுப்பு கொடுத்துள்ளோம். மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள்’’ என்றார்.
இதனிடையே, பனையூரில் வசிப்பவர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட சுதா என்ற பெண், தனது மகனுடன் தவெக தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். விஜயை சந்திக்க நிர்வாகிகள் அனுமதிக்கவில்லை. தான் எந்தக் கட்சியையும் சேர்ந்தவள் அல்ல என்றும், மாற்றுத்திறனாளிகளுக்கு விஜய் உதவ வேண்டும் என்றும் அந்த பெண் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களை சந்திக்க முயன்றபோது, அவரை சூழ்ந்திருந்த கட்சி நிர்வாகிகள் டிவிகே என முழக்கங்களை எழுப்பினர். பல்வேறு தரப்பினரால் அவர் அனுப்பப்பட்டதாக தவெக உறுப்பினர்கள் குற்றம் சாட்டி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.