கன்னியாகுமரி: மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் (சிஐஎஸ்எஃப்) 56-வது எழுச்சி தினத்தையொட்டி, ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்புப் படை மண்டல பயிற்சி மையத்தில் கடந்த 7-ம் தேதி குஜராத்தில் உள்ள லக்பத் கோட்டை மற்றும் மேற்கு வங்கத்தின் பகலி கடற்கரையில் இருந்து கடல் வளங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராணிப்பேட்டையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் பேரணியை தொடங்கி வைத்தார். இந்த அணிவகுப்பில் 14 பெண் ராணுவ வீரர்கள் உட்பட மொத்தம் 125 வீரர்கள் 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கடற்கரை வழியாக சுமார் 6500 கி.மீ. வரும் 31-ம் தேதி கன்னியாகுமரியில் நடைபயணத்தை நிறைவு செய்கின்றனர்.

இந்தப் பயணத்தின்போது, போதைப்பொருள் கடத்தல், ஆயுதக் கடத்தலைத் தடுப்பது குறித்து கடலோர பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். கன்னியாகுமரியில் வரும் 31-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவையொட்டி, மத்திய தொழில் பாதுகாப்பு படை சார்பில் கன்னியாகுமரி கடற்கரையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
இந்த நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று கன்னியாகுமரி வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையின் தென் மண்டல ஐ.ஜி. கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திரா, அரசு விருந்தினர் மாளிகையில் ஹெலிகாப்டர் இறங்குதளம் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து குமரி மாவட்ட அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘அமித்ஷா வருகை குறித்து இன்னும் உறுதியான தகவல் வரவில்லை’ என்றனர்.