சென்னை: இந்திய ரயில்வே வாரியத்தின் உள்கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் அனில்குமார் கண்டேல்வால், தெற்கு ரயில்வேயின் சென்னை மண்டலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ரயில் நிலைய வளர்ச்சிப் பணிகள், மின்மயமாக்கல் பணிகள், ரயில் பாலங்கள் அமைத்தல், சுரங்கப்பாதை பணிகள், சிக்னல், தொலைத்தொடர்பு பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அனைத்து திட்டப் பணிகளையும் குறித்த நேரத்தில் முடிக்க அறிவுறுத்தினார்.
தாம்பரம் ரயில் நிலையத்தில் டிராக்மேன், ஸ்டேஷன் மாஸ்டர்கள், பாயின்ட்மேன்கள், சிக்னல் துறை ஊழியர்கள், ரயில் ஓட்டுனர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து, செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஐரியா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.