சென்னை: குறுகிய, நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் தபால் மற்றும் பார்சல்களை கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்ட புதிய வாகனம் சென்னை தபால் மோட்டார் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை அஞ்சல் மோட்டார் சேவை தற்போது 120 வாகனங்களுடன் இயங்குகிறது. இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் தபால் மற்றும் பார்சல்கள் தடையின்றி கொண்டு செல்லப்படுகிறது.
இந்நிலையில், குறுகிய மற்றும் நெரிசல் மிகுந்த நகர்ப்புறங்களில் அஞ்சல் மற்றும் பார்சல்களை திறம்பட கொண்டு செல்லும் வகையில் புதிய வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிக அஞ்சல் மற்றும் பார்சல்களை எடுத்துச் செல்ல இடவசதி உள்ளது. இந்த வாகனம் நீண்ட கால பயன்பாட்டிற்காக வலுவான கட்டமைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.

இது பிஎஸ்-6 மாசுக்கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வாகனம் தற்போது தமிழ்நாடு அஞ்சல் வட்டம், சென்னை தபால் மோட்டார் சேவையில் சேர்க்கப்பட்டுள்ளது. சென்னை எம்எம்எஸ் வளாகத்தில் நடந்த விழாவில், வாகன சேவையை, தமிழ்நாடு வட்ட அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். சென்னை தமிழ்நாடு அஞ்சல் வட்டம் மற்றும் அஞ்சல் மோட்டார் சேவை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறுகிய மற்றும் நெரிசலான பகுதிகளில் உள்ள தபால் நிலையங்களுக்கு இந்த வாகனம் சேவை செய்யும். இது தொலைதூரப் பகுதிகளில் அஞ்சல் போக்குவரத்து சேவைகளுக்கான இணைப்பை மேம்படுத்துவதோடு, தபால் சேவைகளை சரியான நேரத்தில் வழங்குவதை உறுதி செய்யும்.