ஏப்ரல் முதல் வாரத்தில் இலங்கைக்கு விஜயம் செய்யும் பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் புதிய சூரிய சக்தி மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், இரு நாடுகளுக்கும் இடையே பல புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இலங்கையில் அதிகரித்து வரும் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் புதிய அனல் மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் 2011-ல் கைச்சாத்திடப்பட்டது.
எனினும் திருகோணமலை மாவட்ட மக்கள் சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சம்பூரில் சூரிய ஒளி மின் உற்பத்தியை அனுமதிக்கும் திட்டத்தை மாற்றியமைக்க இந்திய மற்றும் இலங்கை அரசுகள் ஒப்புக்கொண்டன. 2022 டிசம்பரில் கொழும்பில் நடைபெற்ற விழாவில், இந்தியாவின் தேசிய அனல் மின் கழகமும் (NTPC) மற்றும் இலங்கை மின்சார சபையும் சம்பூரில் 100 MW சூரிய மின் உற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டன.

எனினும், இலங்கையில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், ஏப்ரல் மாத தொடக்கத்தில் இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி மாவட்டம் சம்பூரில் அமைக்கப்படவுள்ள புதிய சூரிய சக்தி மின் நிலையத்துக்கு அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன.
இலங்கையில் பல சிவாலயங்கள் இருந்தாலும் திருக்கோணேஸ்வரம், நகுலேஸ்வரம், திருக்கே தீஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய சிவாலயங்கள் பஞ்ச ஈஸ்வரம் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் திருகோணேஸ்வரம் சிவன் கோவில் திருகோணமலையில் அமைந்துள்ளது. இலங்கை வரும் பிரதமர் நரேந்திர மோடி திருக்கோணேஸ்வரம் கோவிலில் தரிசனம் செய்ய வேண்டும் என்றும், இந்த கோவிலை புதுப்பிக்க இந்திய அரசு உதவ வேண்டும் என்றும் இலங்கை இந்து மகாசபை வேண்டுகோள் விடுத்துள்ளது.