நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நேற்று ராஜ்யசபாவில் சோனியா காந்தி மேலும் கூறியதாவது:- 100 நாள் வேலை திட்டத்துக்கான ஒதுக்கீட்டை பா.ஜ.க., தலைமையிலான மத்திய அரசு படிப்படியாக குறைத்து வருகிறது. இது கண்டிக்கத்தக்கது. இந்த திட்டம் கிராமப்புறங்களில் உள்ள லட்சக்கணக்கான ஏழை மக்களின் வாழ்வாதாரத்திற்கான முக்கியமான பாதுகாப்பு வலையமாகும். இதனால்தான் வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் ஒரு முக்கிய மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.
ஆனால் தற்போதைய பாஜக அரசு திட்டமிட்டு திட்டத்தை குழிதோண்டி புதைத்து வருகிறது. இதற்கு உதாரணமாக, இத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு, தேக்கமடைந்து, ரூ. 86,000 கோடி. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 10 ஆண்டுகளில் மிகக் குறைவு. பணவீக்கத்தை கணக்கில் கொண்டால், பட்ஜெட் ஒதுக்கீடு ரூ.4,000 கோடி குறைவாக உள்ளது.
மேலும், பட்ஜெட் ஒதுக்கீட்டில் சுமார் 20 சதவீதம் முந்தைய ஆண்டு நிலுவைத் தொகையை செலுத்த பயன்படுத்தப்படும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மேலும், ஆதார் அடிப்படையிலான பணப் பரிமாற்றம், தேசிய மொபைல் கண்காணிப்பு அமைப்பு, ஊதியம் வழங்குவதில் தாமதம் மற்றும் பணவீக்கத்தை எதிர்கொள்ள ஊதிய உயர்வு இல்லாததால் இத்திட்டம் ஏற்கனவே பல சவால்களை சந்தித்து வருகிறது. எனவே, 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வழங்க வேண்டும்.

அதேபோல், வேலைவாய்ப்பு நாட்களின் எண்ணிக்கையையும் ஆண்டுக்கு 100-லிருந்து 150 ஆக உயர்த்த வேண்டும். MGNREGA திட்டத்தின் கீழ் கெளரவமான வேலைவாய்ப்பு மற்றும் நிதி பாதுகாப்பை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கைகள் அவசியம். இவ்வாறு சோனியா காந்தி கூறினார்.