தஞ்சாவூர்: பள்ளி வகுப்பறை கட்டிடத்தை மாணவரை விட்டு திறக்க வைத்து மக்களின் பாராட்டுக்களை குவித்து வருகின்றனர் மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள்.
தஞ்சாவூர் மானோஜிப்பட்டியில் இயங்கி வருகிறது அரசு ஆதிதிராவிடர் உயர்நிலைப்பள்ளி. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வியுடன் சேர்த்து பல்வேறு சமூக பொறுப்புணர்வுகளும் கற்பிக்கப்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவர்கள் விளையாட்டு, பாட்டு, நடனம், பேச்சுப்போட்டி என மாவட்ட அளவில் பல்வேறு பரிசுகளை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
முடியாத கலைகள் கூட முயற்சி என்ற வேட்டையில் மண்டியிட்டு நிற்கும். நம்முடைய பாரம்பர்ய அறிவையும், விளையாட்டுகளையும் அடுத்த தலைமுறைக்காகவாவது நாம் மீட்க வேண்டிய தேவை அதிகமாகவே உள்ளது. அதில் ஒன்றுதான் சிலம்பம். சிலம்ப கலையில் தஞ்சை மானோஜிப்பட்டி அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் பல்வேறு வெற்றிகளையும், விருதுகளையும், பரிசு கோப்பைகளையும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்படி தனிச்சிறப்புகளால் உயர்ந்து கொண்டே இருக்கும் இப்பள்ளி மாணவர்களுக்காக மும்பை ப்ளூ சிப் நிறுவனத்தினர் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து 2 வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தனர். இந்த வகுப்பறை கட்டடங்கள் தற்போது கட்டி முடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வகுப்பறை கட்டடங்களை பள்ளியின் சாரண மாணவர் நாகேஸ்வரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கல்வெட்டினை மாணவிகள் எழில் இனியா, மார்த்தாள் மேரி இணைந்து திறந்து வைத்தனர். சாரணிய மாணவிகள் குத்துவிளக்கேற்றினர். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சந்திரமௌலி, சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் பேராசிரியர் முரளி கிருஷ்ணன், தெற்கு ரயில்வே பொறியாளர் ரவி, சென்னை ஐஐடி கியூப் நிறுவனத்தைச் சேர்ந்த ஜான், முருகதாஸ், ரவிக்குமார், மானோஜிப்பட்டி எட்வின், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் மருதம்பாள் மற்றும் கிராம மக்கள், ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
அமைச்சர், எம்எல்ஏ அல்லது செலிபிரிட்டிகளை வைத்து பள்ளி வகுப்பறை கட்டிடத்தை திறக்காமல் மாணவரை வைத்தே திறக்க வைத்ததற்காக தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.