ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தியது. இந்தப் போட்டியில், கொல்கத்தா அணிக்கு ரஹானே 56 ரன்கள் மற்றும் சுனில் நரேன் 44 ரன்கள் எடுத்து சிறப்பாக தொடக்கம் கொடுத்தனர். 107/1 என்ற வலுவான நிலையை பெற்ற அந்த அணி, 200 ரன்கள் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பெங்களூரு அணியின் சிறப்பான பந்துவீச்சால், கொல்கத்தா 20 ஓவரில் வெறும் 174 ரன்கள் மட்டுமே எடுத்தது.

அடுத்ததாக, வெற்றி இலக்காக 175 ரன்கள் வைத்துக்கொண்ட பெங்களூரு, 16.2 ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது. விராட் கோலி 59* ரன்கள், பிலிப் சால்ட் 56 ரன்கள் மற்றும் கேப்டன் ரஜத் படிதார் 34 ரன்கள் அடித்து பெங்களூருவை வெற்றிப் பாதையில் அழைத்துச் சென்றனர். இவ்வாறு, நடப்புச் சாம்பியன் கொல்கத்தா தொடக்கமே தோல்வியில் முடிந்த நிலையில், பெங்களூரு வெற்றிகரமாக தொடங்கியது.
போட்டியில் படிதார் அசத்தலாக விளையாடினார். தரமான பந்துவீச்சாளர் சுனில் நரேனுக்கு எதிராக, அவர் 3 சிக்ஸர்கள் அடித்து அட்டகாசம் செய்தார். முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறுகையில், “விராட் கோலி, ரோஹித் சர்மா, தோனி ஆகிய மூன்று ஜாம்பவான்களும் சேர்ந்து, கடந்த 13 வருடங்களில் நரேனுக்கு எதிராக மொத்தம் 4 சிக்ஸர்கள் மட்டுமே அடித்துள்ளனர். ஆனால் ஒரே போட்டியில் படிதார் 3 சிக்ஸர்கள் அடித்தது அபாரமாக உள்ளது” என பாராட்டினார்.
மறுபுறம், கொல்கத்தா அணியின் கேப்டன் ரஹானே செய்த தவறுகள், அந்த அணியின் தோல்விக்கு வழிவகுத்ததாக ஆகாஷ் சோப்ரா விமர்சித்தார். அவர் கூறுகையில், “ரஹானே முதலில் 3 ஓவர்களில் நன்றாக முடிவெடுத்தார். ஆனால் 4வது மற்றும் 5வது ஓவர்களில் ரசிக் சலாம் மற்றும் க்ருனால் பாண்டியாவை கொண்டு வந்தது தவறான முடிவாக அமைந்தது. இந்த சந்தர்ப்பத்தைக் பயன்படுத்தி, பெங்களூரு அணி அதிரடியாக விளையாடியது. ரஹானே சுனில் நரேனை பவுலிங் செய்ய தாமதமாக கொண்டு வந்தது ஒரு பெரிய தவறாக மாறியது” என்றார்.
மேலும், “கொல்கத்தா 10 ஓவரில் 100 ரன்கள் குவித்தது. அந்த வேகத்தில் தொடர்ந்திருந்தால், 200 ரன்கள் எட்டியிருக்கலாம். ஆனால், பெங்களூரு அணி சிறப்பாக கம்பேக் கொடுத்து, கே.கே.ஆர் அணியை கட்டுப்படுத்தியது. பெங்களூருவின் ஸ்பின் பவுலிங் பலவீனமானது என கூறப்பட்டாலும், இந்த போட்டியில் அது அவர்களுக்கு பலமாக அமைந்தது” என அவர் குறிப்பிட்டார்.
இந்த தோல்வி மூலம், கொல்கத்தா அணி தனது கேப்டன்சியில் மாற்றம் கொண்டு வர வேண்டிய அவசியம் இருப்பது வெளிப்பட்டது. அடுத்த போட்டியில் ரஹானே தனது பந்துவீச்சு திட்டத்தில் மாற்றம் கொண்டு வருவாரா என்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பாக உள்ளது.