பெங்களூரு: காங்கிரஸ் அரசை கண்டித்து சட்டசபையில் பா.ஜ.க – ம.ஜ.த., இணைந்து போராட்டம் நடத்தும் என, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி தெரிவித்தார். கர்நாடகாவில் மழைக்கால சட்டசபை கூட்டத்தொடர் வரும் 15ம் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு, பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில், பா.ஜ.க – ம.ஜ.த., ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று இரவு நடந்தது.
மத்திய கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி, மத்திய உணவுத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக் உள்ளிட்ட இரு கட்சிகளின் மூத்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். இரண்டு மணி நேரம் நீடித்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தொடரில் காங்கிரஸ் அரசின் தோல்விகள் மற்றும் அமளி குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டது.
அப்போது மத்திய அமைச்சர் குமாரசாமி கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த நாள் முதல் ஊழலில் சிக்கித் தவிக்கிறது. ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் அரசு கண்டுகொள்ளாமல் உள்ளது. இதை கண்டித்து, சட்டசபையில் பா.ஜ.க – ம.ஜ.த., இணைந்து போராட்டம் நடத்தும்.
முதலாவது சட்டவிரோத செயலில் ஈடுபட்டுள்ளது. ஒரு பக்கம் மூடா ஊழல், மறுபுறம் வால்மீகி வளர்ச்சி வாரிய மோசடி, மறுபுறம் எஸ்சி, எஸ்டிக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வாக்குறுதியளிக்கப்பட்ட திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வறட்சி மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இதுவரை நிவாரண நிதி வழங்கப்படவில்லை. சட்டம் ஒழுங்கு சரியில்லை.
உறுதிமொழி திட்டங்களை செயல்படுத்த தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் சம்பளம் வேறு. இதனால் அரசுக்கு தேவையற்ற செலவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.