சென்னை: உழைக்கும் பெண்கள் முதல் குடும்பத்தை பராமரிக்கும் தலைவிகள் வரை அனைவரின் நலன் மற்றும் வளர்ச்சியை ஊக்குவிக்க “மேஜிக் தமிழ்” அமைப்பு சார்பில் “மேஜிக் பெண்கள் 2.0” என்ற சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி வரும் 29ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. இதில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் நலனுக்காக பல்வேறு அம்சங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். மேலும், மக்களவை உறுப்பினர் மற்றும் மருத்துவர் சுதா, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன், டிக்கெட் 9 நிறுவனத்தின் சி.இ.ஓ யாழினி சண்முகம் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த நிகழ்ச்சி 29ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை சென்னை அண்ணா சாலையில் உள்ள எம்.எம்.ஏ (Madras Management Association) வில் நடைபெறவுள்ளது.
மேஜிக் பெண்கள் 2.0 நிகழ்ச்சியின் அம்சங்கள்:
மேஜிக் தமிழ் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்ச்சியில் “தாக்கத்தை ஏற்படுத்தும் விவாதங்கள், ஈடுபாட்டுடன் கூடிய குழு அமர்வுகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் முக்கிய உரைகள்” இடம்பெறவுள்ளன. இதில், பெண்கள் தங்களது திறமையை மேம்படுத்துவதற்கான பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்படும். முக்கியமாக, மனநலம், பொருளாதார மேம்பாடு மற்றும் தொழில் முனைவு குறித்த உரைகள் நிகழ்த்தப்படவுள்ளன.
விவாதம் மற்றும் உரையாடல்:
“தொழில் முனைவோர் மற்றும் பெண் சாதனையாளர்கள்” என்ற தலைப்பில் நடைபெறும் கலந்துரையாடலில், திரைப்பட மற்றும் சின்னத்திரை நடிகை நீலிமா ராணி பேசவுள்ளார். இதில் மக்களவை உறுப்பினர் சுதா, தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் சுதா ராமன், மற்றும் டிக்கெட் 9 நிறுவனத்தின் சி.இ.ஓ யாழினி சண்முகம் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
நடுவர் மற்றும் உரையாளர்:
விவாத நிகழ்ச்சியில் SPIKRA நிறுவனத்தின் சி.இ.ஓ ராதா ரங்காச்சாரி நடுவராக செயல்படுகிறார். அதேபோல் ஸ்ரீராம் கேபிடல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுபாஸ்ரீ ஸ்ரீராம் விவாதத்தில் கலந்து கொள்கிறார்.
முன் பதிவு மற்றும் கட்டணம்:
“பெண்கள் மனநலம் மற்றும் நல்வாழ்வு” என்ற தலைப்பில், தொழில் முனைவோர் மற்றும் மனநல பயிற்சியாளரான மாலிகா ரவிக்குமார் உரையாற்றவுள்ளார். மேலும், “பெண்கள் தங்களுக்கான நிதியை எவ்வாறு திட்டமிட வேண்டும்” என்ற தலைப்பில், Prime Investors நிறுவனத்தின் இணை நிறுவனர் வித்யா பாலா உரையாற்றவுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள விரும்பும் பெண்கள் Ticket 9 இணையதளத்தின் மூலம் முன்பதிவு செய்யலாம். நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கான கட்டணம் ஒருவருக்கு ₹1000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவோர் மற்றும் தொழில் துறையில் முயற்சி மேற்கொண்டு வரும் பெண்கள் மத்தியில் இந்த நிகழ்ச்சி பெரும் வரவேற்பைப் பெற்றுவருகிறது.