அமராவதி: ‘‘ஆந்திரா முழுவதும் சுதந்திர தினம் முதல் அண்ணா கேன்டீன்கள் திறக்கப்படும்’’ என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமாநாயுடு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அம்மா உணவகங்களை போன்று, ஆந்திர மாநிலத்தில் கடந்த சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்பட்டன. ஆனால், ஜெகன் அரசு வந்ததும், அண்ணா கேன்டீன்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது மீண்டும் சந்திரபாபு நாயுடு முதல்வராக பதவி ஏற்றதும், அண்ணா கேன்டீன்கள் மீண்டும் திறக்கப்படும் என அறிவித்தார்.
இந்நிலையில், ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமாநாயுடு அமராவதியில் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: ஆந்திர மாநிலத்தில் 153 இடங்களில் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி முதல், அண்ணா கேன்டீன்கள் தொடங்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும்.
அதே போல், ‘தாய்க்கு வந்தனம்’ திட்டத்தின் கீழ் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் தாய்மார்களுக்கு ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வாக்குறுதியும் நிறைவேற்றும் போது மாநிலம் முழுவதும் ஒரு பண்டிகையை கொண்டாடுவது போல் நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இதில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள். இவ்வாறு அமைச்சர் நிம்மல ராமாநாயுடு கூறினார்.