சென்னை: கவுகாத்தியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சிஎஸ்கே அணியின் சிறந்த பினிஷராக அறியப்பட்ட எம்எஸ் தோனி இந்த ஓவரில் 11 பந்துகளில் வெறும் 16 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு (ஆர்சிபி) எதிரான ஆட்டத்தில் தோனி 9-வது இடத்தில் வந்தார். இது அப்போது பெரிதும் விமர்சிக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று முன்தினம் ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தோனி 7-வது இடத்தில் வந்தார். இருந்த போதிலும், அவரால் சிஎஸ்கே அணியை பின்னுக்குத் தள்ள முடியவில்லை. கடைசி ஓவரின் முதல் பந்திலேயே தோனி ஆட்டமிழந்தார். இது குறித்து சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது:-

தோனியின் பேட்டிங் ஆர்டர் போட்டியின் சூழ்நிலை மற்றும் நேரத்தை பொறுத்தே அமையும். இதில் தோனி முடிவு எடுக்கிறார். எப்போது களத்திற்கு வர வேண்டும் என்பதை அவரே தீர்மானிக்கிறார். அவரது உடலும் முழங்காலும் முன்பு இருந்தது போல் இல்லை. அவர் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், அதில் சில சிக்கல்கள் உள்ளன. அவரால் தொடர்ந்து 10 ஓவர்கள் நின்று பேட் செய்ய முடியாது.
அவர் அணிக்காக என்ன செய்ய முடியும் என்று சிந்தித்து செயல்படுகிறார் என்றே கூறுவேன். இன்று போல், வானிலை சீராக இருக்கும் போது, அவர் சற்று முன்னதாகவே பேட்டிங் செய்ய வெளியே வருவார். இதன் மூலம் மற்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இதை நான் போன வருடம் சொல்லியிருந்தேன். எம்எஸ் தோனி எங்களுக்கு மிகவும் மதிப்புமிக்க வீரர். அவர் ஒரு சிறந்த தலைவர் மற்றும் விக்கெட் கீப்பர். இவ்வாறு ஸ்டீபன் பிளெமிங் கூறினார்.