நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வார நாட்களில் 6,000 வாகனங்களுக்கும், வார இறுதி நாட்களில் 8,000 வாகனங்களுக்கும் மட்டுமே இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்தது. குறிப்பிட்ட வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதால், புதிய வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று புதிதாக விண்ணப்பித்தவர்கள் இ-பாஸ் கிடைக்காததால் திருப்பி அனுப்பப்படுகின்றனர். சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரி மாவட்டம் ஊட்டி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு ஆண்டுதோறும் கோடை காலத்தில் லட்சக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
இதனால் ஏற்பட்ட நெருக்கடியை தவிர்க்க சென்னை உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது அதன்படி, கடந்த மே மாதம் 7-ம் தேதி முதல் நீலகிரி மற்றும் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்குள் ஏப்., 1 முதல் ஜூன் இறுதி வரை, திங்கள் முதல் வெள்ளி வரை, தினமும், 6,000 சுற்றுலா வாகனங்களும், சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், 8,000 சுற்றுலா வாகனங்களும் மட்டுமே, நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்க வேண்டும் என, உயர் நீதிமன்றம், கடந்த மாதம், மற்றொரு தடை விதித்தது.

அதன்படி இன்று ஏப்ரல் 1-ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுற்றுலா வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. ஒவ்வொரு நாளும் முதலில் விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு பயன்படுத்த அனுமதிக்கப்படும். இருப்பினும், நீலகிரி மாவட்ட பதிவு எண் கொண்ட வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், சரக்கு வாகனங்கள் ஆகியவற்றுக்கு எந்த தடையும் இல்லை. இதையடுத்து, நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள கல்லாறு, குஞ்சப்பனை, முள்ளி, கக்கநல்லா, பாட்டவயல், சேரம்பாடி, நாடுகானை உள்ளிட்ட 14 சோதனைச் சாவடிகளில் தீவிர இ-பாஸ் சோதனை செய்து வாகனங்கள் செல்ல தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்திற்குள் நுழைய https://epass.tnega.org/home என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், கொடைக்கானலில் வார நாட்களில் 4,000 வாகனங்களும், வார இறுதி நாட்களில் 6,000 வாகனங்களும் மட்டுமே அனுமதிக்கப்படும் என இன்று முதல் ஜூன் 30ம் தேதி வரை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது.
இந்த எண்ணிக்கை வாகனங்களின் அடிப்படையில் இ-பாஸ் வழங்கும் வகையில் இணையதளம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாளில் 4,000 வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்கினால், அதற்கு மேல் விண்ணப்பித்தவர்கள் வேறு நாளை தேர்வு செய்ய வேண்டும்.