பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் முக்கிய திருவிழாவாக பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இவ்விழாவிற்கு ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பழனியில் உள்ள முருகனுக்கு தீர்த்தம் எடுத்து வந்து அபிஷேகம் செய்கின்றனர்.
திருஆவினன்குடி திருக்கோயில் மிதுன லக்னத்தில் வரும் 5-ம் தேதி காலை 11 மணி முதல் 12 மணிக்குள் கொடியேற்றத்துடன் விழா துவங்க உள்ளது. 10 நாள் திருவிழாவில் வெள்ளிக் காமத்தேனு, வெள்ளி ஆட்டுக்கிட, வெள்ளி யானை, தங்ககுதிரை, வெள்ளிக் பிடாரி மயில் உள்ளிட்ட வாகனங்களில் வள்ளி, தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமி வலம் வருவார். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வரும் 10-ம் தேதி நடக்கிறது. அன்று மாலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் வள்ளி, தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்கு சுவாமி திருமஞ்சன அலங்காரத்தில் வெள்ளி ரதத்தில் வலம் வருவார்.

முக்கிய நிகழ்ச்சியான பங்குனி உத்திர தேரோட்டம் ஏப்.11-ம் தேதி மாலை 4.30 மணிக்கு நடக்கிறது. 14-ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி 10 நாட்களும் குடமுழுக்கு நினைவு மண்டபத்தில் பக்தி சொற்பொழிவு, பக்தி இசை, நாதஸ்வர இசை, பரதநாட்டியம், வீணை இசை, பொம்மலாட்டம், தேவர் ஆட்டம், விகடம், சாக்ஸபோன், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியன நடைபெறுகின்றன.
தங்கரத ஊர்வலம் ரத்து பங்குனி உத்திரத் திருவிழாவையொட்டி, பழனி முருகன் கோயிலில் ஏப்.9 முதல் 13-ம் தேதி வரை 5 நாட்களுக்கு தங்கரத ஊர்வலம் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வரும் 9-ம் தேதி கோவில் நிர்வாகம் சார்பில் தங்கரத ஊர்வலம் நடக்கிறது.