புதுடெல்லி: வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் இரு மூத்த உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர். ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே கடும் வாக்குவாதத்துக்குப் பிறகு மக்களவையில் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆதரவாக 288 உறுப்பினர்களும் எதிராக 232 உறுப்பினர்களும் வாக்களித்தனர். நள்ளிரவு 2 மணிக்கு மசோதா நிறைவேற்றப்பட்டது. ராஜ்யசபாவில் தற்போது விவாதம் நடந்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்கள் முகமது காசிம் அன்சாரி, முகமது நவாஸ் மாலிக் ஆகியோர் கட்சியில் இருந்து விலகுவதாக பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஏப்ரல் இருவரும் எழுதிய கடிதத்தில், “முழுமையான மதச்சார்பற்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியவர் என்ற வகையில், எங்களைப் போன்ற லட்சக்கணக்கான இந்திய முஸ்லிம்கள் உங்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தனர் என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த மசோதா அரசியலமைப்பின் பல அடிப்படை உரிமைகளை மீறுகிறது. இந்த மசோதா மூலம் இந்திய முஸ்லிம்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இதை நீங்களும் உங்கள் கட்சியும் உணரவில்லை. எனது வாழ்நாளில் பல ஆண்டுகளை கட்சிக்காக அர்ப்பணித்துள்ளதை எண்ணி மிகுந்த வருத்தம் அடைகிறேன்” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.