நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது, இது நாட்டிற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். வக்ஃப் வாரிய சொத்துகளை நிர்வகிப்பது தொடர்பான இந்த சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்தகாலை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

12 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்ற காரசார விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு 2 மணியளவில் இந்த மசோதா மீதும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நள்ளிரவு 2.45 மணியளவில் 128 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்தனர், அதே சமயம் 95 பேர் எதிராக வாக்களித்தனர். இதன் மூலம், மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் வக்ஃப் வாரிய மசோதா நிறைவேறியது.
இப்போது, இந்த மசோதா குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட உள்ளது. அவரின் ஒப்புதலுக்கு பிறகு, இந்த மசோதா சட்ட வடிவம் பெறும்.
மசோதா குறித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, “வக்ஃப் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். நாட்டின் சமூக பொருளாதார நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் இந்த மசோதா ஒரு திருப்புமுனையாக அமையும்.” என்று குறிப்பிட்டார்.
இந்த மசோதாவுக்கு ஆதரவளித்த அனைத்து எம்பிக்களுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். மேலும், இந்தியா சமூக நீதியை முன்னிலைப்படுத்தும் நவீன சட்ட கட்டமைப்புக்குள் நுழைவதாகும் என்றும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் கண்ணியத்தையும் பாதுகாப்பது முக்கிய இலக்காக இருப்பதாக கூறினார்.