தமிழ்நாட்டில் ஏப்ரல் 6-ந் தேதி ராம நவமி நாளில் பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்து, ராமேஸ்வரத்தை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். இதற்கிடையில், 8,300 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு ரயில் மற்றும் சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். பிரதமர் மோடி, ராமேஸ்வரத்தில் 12.45 மணியளவில் ராமநாதசுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பின், 1.30 மணிக்கு, புதிய ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடி, இந்தியாவின் முதல் செங்குத்து தூக்கு கடல் பாலமான புதிய பாம்பன் ரயில் பாலத்தை திறந்து வைக்கிறார். இந்த பாலம், உலக அளவில் இந்திய பொறியியல் திறமைக்கு குறிப்பிடத்தக்க சாதனையாக உள்ளது. ராமாயணத்தின் படி, ராமர் சேது கட்டுமானம் ராமேஸ்வரத்தை தனுஷ்கோடியில் இருந்து இணைக்கும் வழியில் தொடங்கப்பட்டது. இந்த புதிய பாலம், 550 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 2.08 கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 99 இடைவெளி இணைப்புகளுடன், 72.5 மீட்டர் செங்குத்து லிப்ட் ஸ்பானும், 17 மீட்டர் உயரமும் கொண்டுள்ளது. இது கப்பல்களின் சீரான இயக்கத்தையும், தடையற்ற ரயில் போக்குவரத்தையும் உறுதி செய்கிறது.
பாலம், துருப்பிடிக்காத எஃகு வலுவூட்டல் மற்றும் உயர் தர பாதுகாப்பு வண்ணப்பூச்சு கொண்டு கட்டப்பட்டுள்ளது. இது இரட்டை ரயில் தடங்களை அமைக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பாலம் கடுமையான கடல் சூழலில் நீண்ட ஆயுளை உறுதி செய்கிறது.
அதன் பிறகு, 8,300 கோடி ரூபாய் மதிப்பில் தமிழ்நாட்டில் பல்வேறு சாலைத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். இதில், தேசிய நெடுஞ்சாலை எண் 40-ல் வாலாஜாபேட்டை – ராணிப்பேட்டை பிரிவில் 28 கிலோமீட்டர் நீளப் பாதையை நான்கு வழிப்பாதையாக மாற்றுவது, தேசிய நெடுஞ்சாலை எண் 332-ல் விழுப்புரம் – புதுச்சேரி பிரிவில் 29 கிலோ மீட்டர் நீளமான 4 வழிச்சாலை, மற்றும் சோழபுரம் – தஞ்சாவூர் பிரிவில் 48 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலைகள் அடிக்கல் நாட்டப்படுகின்றன.
இந்த புதிய சாலைகள், பல புனிதத் தலங்களையும் சுற்றுலாத் தலங்களையும் இணைத்து, மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, துறைமுகங்கள் ஆகியவற்றுக்கு விரைவாக போக்குவரத்தை வழங்கும். உள்ளூர் விவசாயிகளுக்கு வேளாண் பொருட்களை அருகிலுள்ள சந்தைகளுக்கு எளிதாக கொண்டு செல்ல உதவுவதாகவும், பொருளாதார நடவடிக்கைகளையும் ஊக்குவிக்கும் வகையில் அமைக்கப்படுகின்றன.