வேலூர்: தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத் இன்று காட்பாடி காந்திநகரில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:- வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா, பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது முஸ்லிம் மக்களுக்கும் சமூகத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு அது அவசியம் என்று வலியுறுத்துகிறது. இந்தியாவில் ராணுவம் மற்றும் ரயில்வேக்கு அடுத்தபடியாக வக்ஃப் வாரியம் மூன்றாவது பெரிய சொத்துக்களைக் கொண்டுள்ளது. சுமார் 9 லட்சம் ஏக்கர் அல்லது 9 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதில் உண்மை என்ன என்பதை கண்டறிய இந்த மசோதா அவசியம். இந்தியா முழுவதும் 200 முதல் 300 பேர் மட்டுமே வக்ஃப் சொத்து மூலம் வருமானத்தை அனுபவித்து வருகின்றனர்.

இந்த வருமானம் ஏழை, எளிய மக்களைச் சென்றடையவில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது. வக்ஃப் சொத்து மூலம் எத்தனை பேர் கல்வியில் முன்னேறியுள்ளனர், எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது என்பதை பார்க்க வேண்டும். உண்மையில், வக்பு வாரியம் மூலம் ஏழை மக்களுக்கு எந்த உதவியும் செய்யப்படவில்லை. இந்த வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவை தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சி முழு மனதுடன் வரவேற்கிறது. இந்த மசோதாவில் இரண்டு பெண்களும் குழு உறுப்பினர்களாக சேர்க்கப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது, வக்பு வாரிய தலைவராக பதர் சயீத்தை நியமித்தார். அதனால் இந்தியாவிலேயே தமிழகம் அப்போது முன்மாதிரியாக விளங்கியது. வக்பு வாரிய சொத்துக்களை சிலர் அனுபவித்து வருகின்றனர். அந்தச் சொத்தை அவர்களிடமிருந்து திரும்பப் பெற வேண்டும். மேலும், வக்பு வாரியத்தில் எவ்வளவு சொத்து உள்ளது என்பது குறித்து மத்திய, மாநில அரசுகள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.