சென்னை: தமிழக பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3 முதல் 27 வரை நடந்தது. 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 28-ம் தேதி துவங்குகிறது. அதேபோல், 1 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஏப்., 8=ம் தேதி முதல், 24=ம் தேதி வரை, முழு ஆண்டு தேர்வு நடக்கும் என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது.
அதன் பின், கோடை வெயிலின் தாக்கத்தால், 1 முதல், 5-ம் வகுப்பு வரையிலான, இறுதி செமஸ்டர் தேர்வு, ஏப்.,7 முதல், 17-ம் தேதி வரை, முன்கூட்டியே நடக்கும் என, திருத்தப்பட்ட தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான இறுதி செமஸ்டர் தேர்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழி தேர்வுகள் நடக்கிறது. 1, 2 மற்றும் 3-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் 4 மணி வரையும் நடைபெறும்.

வினாத்தாள் பதிவிறக்கம்: 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் நாளை தொடங்குகிறது. 6 மற்றும் 7-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், 8 மற்றும் 9-ம் வகுப்புகளுக்கு பிற்பகல் 2 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலும் தேர்வுகள் நடைபெறும். மாநில அளவில் இத்தேர்வு நடத்தப்படுவதால், வினாத்தாள்கள் எமிஸ் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டு, தேவைக்கேற்ப நகல் எடுக்கப்பட்டு, மாவட்ட கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கோடை விடுமுறை: தேர்வுகள் முடிந்து, 1 முதல் 3-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 12-ம் தேதியும், 4 மற்றும் 5-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 18-ம் தேதியும், 6 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 25-ம் தேதியும் கோடை விடுமுறை தொடங்கும். இருப்பினும், ஆசிரியர்கள் பள்ளியின் கடைசி வேலை நாள் வரை பணிக்கு வர வேண்டும். கோடை விடுமுறை முடிந்து ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.