சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஞானசேகரன் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சிறப்பு புலனாய்வுக் குழு, மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் ஞானசேகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஞானசேகரன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஞானசேகரன் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி ஞானசேகரன் தாக்கல் செய்த மனுவுக்கு காவல் துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஞானசேகரன் மீதான குற்றச்சாட்டுகளுக்கான அனைத்து ஆதாரங்களும் அதில் உள்ளன.

ஞானசேகரன் குற்றவாளி என்பதற்கான அனைத்து ஆதாரங்களும் உள்ளதால் வழக்கில் இருந்து அவரை விடுவிக்கக் கூடாது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, விடுதலை கோரும் மனு மீது ஞானசேகரன் தரப்பு வாதிடுவதற்கான வாதம் இன்றும் தொடர்கிறது.