தங்கவயல், : “”தங்கச் சுரங்கத்திற்கு சொந்தமான சயனைட் மண்ணில் தங்கம் எடுக்கும் பணி அவ்வளவு எளிதானது அல்ல,” என, கோலார் ம.ஜ.த., எம்.பி., மல்லேஸ்பாபு கூறினார். தங்கச் சுரங்கத்தை புனரமைக்க வேண்டும், புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும், தங்கம் எடுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என 30 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தங்கம் பிரித்தெடுப்பதற்கான அதிக செலவு காரணமாக, தங்க சுரங்க தொழில் நிறுத்தப்பட்டது.
பூமிக்கு அடியில் வெட்டி எடுக்கப்பட்ட பாறைகளில் இருந்து வெளியேறும் கழிவு மண், 13 இடங்களில் கொட்டப்பட்டுள்ளது. இது சயனைட் மலை என்று அழைக்கப்படுகிறது. இந்த மண்ணில் இருந்து தங்கம் மற்றும் இதர உலோக பொருட்களை சுத்திகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து, கோலார் ம.ஜ.த., – எம்.பி., மல்லேஸ் பாபு நேற்று அளித்த பேட்டி: கோலார் மாவட்டத்தில் தங்கச் சுரங்கம் மூடப்பட்டுள்ளது. திறந்த வெளியில் கொட்டப்படும் மண்ணை மீண்டும் சுத்திகரிப்பு செய்தால் ஒரு டன் மண்ணில் 0.5 கிராம் தங்கம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.500 மதிப்புள்ள 0.5 கிராம் தங்கத்தை பிரித்தெடுக்க குறைந்தபட்சம் ரூ.2,500 செலவாகும்.
மண்ணை சுத்தம் செய்ய ‘ஜே.சி.பி.,’ இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து வாகனங்களை பயன்படுத்த வேண்டும். இதில், பல்வேறு பிரச்னைகள் உள்ளன. இதுதொடர்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு என்னையும், கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமியையும் தொழில்நுட்ப குழுவினர் சந்தித்தனர். ‘பைலட் திட்டம்’ தயாரிக்க அறிவுறுத்தப்பட்டது.
தொழில்நுட்பக் குழுவின் திட்ட அறிக்கையின்படி சாதக, பாதகங்களை அறிந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்க முடியும். சயனைட் மண்ணில் தங்கச் சுரங்கம் உடனடியாக தொடங்க வாய்ப்பில்லை. இவ்வாறு அவர் கூறினார்.