சென்னை: சென்னை கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில் சென்னை ஐசிஎப் மூலம் தயாரிக்கப்பட்ட 12 பெட்டிகள் கொண்ட முதல் குளிரூட்டப்பட்ட மின்சார ரயில் சேவையை தெற்கு ரயில்வே நிர்வாகம் இன்று தொடங்குகிறது. ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கடற்கரையில் இருந்து காலை 7, மாலை 3.45 மற்றும் இரவு 7.35 மணிக்கு புறப்பட்டு, காலை 7.42, மாலை 4.26, இரவு 8.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும். அங்கிருந்து புறப்படும் முதல் இரண்டு ரயில்கள் மட்டும் காலை 8.35 மற்றும் மாலை 5.25 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

எதிர் திசையில் செங்கல்பட்டில் இருந்து காலை 9 மற்றும் மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு 9.41 மற்றும் மாலை 6.26 மணிக்கு தாம்பரம் சென்றடையும். பின்னர் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு காலை 10.30 மணிக்கும் இரவு 7.15 மணிக்கும் கடற்கரையை வந்தடையும். அதேபோல், தாம்பரத்தில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கடற்கரை ரயில் நிலையத்தை 6.45 மணிக்கு சென்றடையும்.
இந்த ரயில் காலை மற்றும் இரவு நேரங்களில் புறநகர் ரயில் பாதையிலும் மற்ற நேரங்களில் பிரதான மின்சார ரயில் பாதையிலும் இயக்கப்படும். பிரதான பாதையில் இயக்கப்படும் போது, கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, பரங்கிமலை, தாம்பரம், பெருங்களத்தூர் ,கூடுவாஞ்சேரி, பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில், பரனூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.