சென்னை: மேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக வட தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று வீசும். நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. மேலும், தமிழகத்தை நோக்கி வீசும் மேற்குக் காற்றில் வேக வேறுபாடு உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். இதனிடையே, நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையின்படி, அதிகபட்சமாக கோவை சின்னக்கல்லாரில் 13 செ.மீ., வால்பாறையில் 9 செ.மீ., சோலையாற்றில் 8 செ.மீ., தேவாலாவில் 7 செ.மீ., அவலாஞ்சி, விண்ட்வொர்த்தில் தலா 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. எஸ்டேட் மற்றும் பந்தலூர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக வட தமிழக கடலோர பகுதிகள் மற்றும் குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 முதல் 45 கிமீ வேகத்திலும், அவ்வப்போது மணிக்கு 55 கிமீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோர பகுதிகளில் இன்று முதல் 18ம் தேதி வரை மணிக்கு 45 முதல் 55 கிமீ வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்றும் அவ்வப்போது மணிக்கு 65 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.