மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா பகுதியில் உள்ள விவசாயிகள், பருத்தி, பருப்பு, பட்டாணி போன்ற வழக்கமான பயிர்களுக்கு பதிலாக மலை வேம்பு மரத்தை தேர்வு செய்து சாகுபடிக்குத் திரும்பி வருகின்றனர். இந்த மரம் நான்கு ஆண்டுகளில் அறுவடைக்கு தயாராகி, குறைந்த செலவில் அதிக வருமானத்தை தருவதால், விவசாயிகளிடையே விருப்பம் அதிகரித்து வருகிறது.

சாதாரண பயிர்களில் உழைப்பு அதிகம் இருந்தாலும், லாபம் குறைவாகவே இருக்கும். ஆனால் மலை வேம்பு வேகமாக வளர்வது, அதிக சந்தை தேவை இருப்பது, தளவாடங்கள், கதவுகள், படகுகள் உள்ளிட்ட மரப் பொருட்கள் தயாரிப்பில் முக்கிய பங்கு வகிப்பது என பல்வேறு காரணங்களால் விவசாயிகள் இதனைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஒரு ஏக்கரில் 600 முதல் 700 மரங்களை நடலாம். ஒவ்வொரு மரத்திலிருந்தும் 12 முதல் 15 குவிண்டால் வரை மரப் பொருள் கிடைக்கும். சந்தை விலை டன்னுக்கு ₹5000 முதல் ₹6000 வரை இருக்கும். இதனால் ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து லட்சக்கணக்கில் வருமானம் ஈட்ட முடிகிறது.
இந்த மரம் வறட்சியைத் தாங்கக்கூடியது. பலவிதமான மண்ணிலும் வளரக்கூடியது. ஆரம்பத்தில் மட்டும் சிறிது பராமரிப்பு தேவைப்படும். பூச்சிகள், நோய்கள் தாக்குவதற்கான வாய்ப்பு குறைவாகவே இருக்கும். நிபுணர்கள் கூறுவதுபோல், இது விவசாயிகளுக்கு “தங்கமரம்” எனப் பெயர்பெற்றுள்ளது.
இந்த மரம் சுற்றுச்சூழலுக்கும் பயனளிக்கிறது. அதிக ஆக்ஸிஜன் வெளியீடு, மண் வளத்தை பராமரிப்பு, இலைகள் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுவது போன்ற பல நன்மைகள் உள்ளன. மரங்களுக்கு அதிக தேவை இருப்பதால், வணிகர்கள் நேரடியாக விவசாயிகளிடம் வந்து வாங்கும் நிலை உருவாகியுள்ளது. இதனால் சந்தை கவலையும் குறைந்து, நிதி பாதுகாப்பு வலுப்பெறுகிறது.