பேராவூரணி: தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின் 2வது மாநில மாநாட்டை பேராவூரணியில், டிச.18ஆம் தேதி சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கத்தின், தஞ்சாவூர் மாவட்ட 2 ஆவது மாநாடு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. மாநாட்டுக்கு, மாவட்டத் தலைவர் எம்.செல்வம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர்.எஸ்.வேலுச்சாமி வேலை அறிக்கை வாசித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், தென்னை விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளர் ஆர்.சி.பழனிவேலு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்கம் மாநிலச் செயலாளர் விஜயமுருகன் சிறப்புரையாற்றினார். மாநாட்டில், புதிய மாவட்டத் தலைவராக எம்.செல்வம், மாவட்டச் செயலாளராக ஆர்.எஸ்.வேலுச்சாமி, மாவட்டப் பொருளாளராக ஆர்.அரங்கசாமி ஆகியோர் உள்ளடக்கிய 17 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.
வியாபாரிகள் விவசாயிகளிடம் லாபக்காய் எடுப்பதை தவிர்க்க அரசே கிலோ கணக்கில் தேங்காயை கொள்முதல் செய்ய வேண்டும். தமிழக அரசு நியாய விலைக் கடைகளில், பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெயை விநியோகம் செய்ய வேண்டும். தஞ்சை மாவட்டத்தில், தென்னை சார்ந்த தொழில்களை ஒன்றிய, மாநில அரசுகள் உருவாக்க வேண்டும்.
பேராவூரணியில் கொப்பரை கொள்முதல் நிலையத்தை ஏற்படுத்த வேண்டும். தென்னை விவசாயிகளுக்கு உரம், பூச்சி மருந்துகளை மானிய விலையில் வழங்க வேண்டும். தென்னைக்கும் இன்சூரன்ஸ் திட்டத்தை விரிவு படுத்த வேண்டும்.
தென்னையை தாக்கும் வெள்ளை வாடல் நோய், காண்டாமிருக வண்டு தாக்குதல் உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்த மருந்துகளை கண்டுபிடிக்க வேண்டும். சென்னை விவசாயிகள் சங்கத்தின் இரண்டாவது மாநில மாநாட்டை டிச.18ஆம் தேதி பேராவூரணியில் சிறப்பாக நடத்துவது” என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநில மாநாட்டையொட்டி, நவீன் ஆனந்தனை தலைவராகவும், ஆர்.எஸ்.வேலுச்சாமியை செயலாளராகவும், சி.ஆர்.சிதம்பரத்தை பொருளாளராகவும் கொண்ட வரவேற்புக்குழு அமைக்கப்பட்டது. இதில், மாவட்டம் முழுவதிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்து கொண்டனர்.