ஏர் பூட்டி உழைக்கும் விவசாயிகளிடம் இருந்து மங்கள நிகழ்வு வரை வெற்றிலை முக்கியப் பங்கு வகிக்கிறது. வெற்றிலையோடு சேர்ந்த புகையிலை உடலுக்குத் தீங்கு என்றாலும் வெற்றிலை நிறைய மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. வெற்றிலை ஒரு சில மாவட்டங்களில் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், காவிரி ஆற்றுப் படுகையில் விளைவதால் கும்பகோணம் வெற்றிலை தனி சிறப்பைப் பெற்று விளங்குகிறது. இதலையே தனிச் சுவையும் மனமும் கொண்டதாக இருக்கிறது.
இது கும்பகோணம் வெற்றிலை என அழைக்கப்பட்டாலும் கூட, திருவையாறு, ஆச்சனூர்,திருப்பந்துருத்தி, பாபநாசம்,ராஜகிரி, பண்டாரவாடை, வண்ணியடி உள்ளிட்ட கும்பகோணத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் இந்த வெற்றிலை விளைவிக்கப்பட்டு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்களுக்கு நாள்தோறும் அனுப்பி வைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வட இந்திய மாநிலங்களுக்கு இங்கிருந்து அதிகளவில் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் பெருமையைப் பறைசாற்றும் விதமாக்கப் பாரதியார் பாடிய “சிந்து நதியின் மிசை நிலவினிலே,
சேரநன்னாட்டிளம் பெண்களுடனே” பாடலில் காவிரி வெற்றிலையைப் பற்றி “கங்கை நதிபுரத்து கோதுமை பண்டம். காவிரி வெற்றிலைக்கு மாறுக் கொள்வோம்” என்ற வரிகள் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். புகழ்பெற்ற கும்பகோணம் வெற்றிலை சாகுபடியைக் கும்பகோணம் அருகே உள்ள சுவாமி மலையைச் சேர்ந்த ஷாஜகான் வண்ணியடி மற்றும் ராஜகிரி பகுதியில் சுமார் 15 ஏக்கரில் 25 ஆண்டுகளுக்கு மேலாக ஈடுபட்டு வருகிறார். நிலத்தை உழுது அகத்தி விதையை விதை விதைக்கப்படுகிறது.
செடி வளர 40-60 நாட்கள் ஆகிறது. அகத்தி அரை அடி உயரம் வரை வளர்ந்த பின், வெற்றிலை கொடி பதியம் போடப்படுகிறது. பிறகு தொழு உரம் போடப்படுகிறது. கடுமையான காற்றாலும் வெயிலாலும் வெற்றிலை கொடி சேதமாகும் அதனால் கொடி நன்கு வளர்ந்து அகத்தி மரத்தின் மீது படரும் வரை, வெற்றிலை கொடிக்காலைச் சுற்றிச் சூரிய ஒளி மற்றும் காற்று புகாதவாறு தென்னங்கீற்றால் வேலி அமைக்கப்படுகிறது. அகத்தி செடி மற்றும் வெற்றிலைக் கொடி வளர்ந்து அறுவடைக்குத் தயாராக பத்து மாதங்கள் ஆகிறது. பிறகு 20 நாட்களுக்கு ஒரு முறை வெற்றிலை அறுவடை செய்யப்படுகிறது.
இது மிகவும் கடினமான தொழில் எனவும், என்னிடம் 25 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர், இருந்தாலும் இது கடினமான தொழில் என்பதால் கூலி ஆட்கள் தட்டுப்பாடு ஏற்படுவதாக விவசாயி கூறினார். மேலும் இது குறித்து விவசாயி ஷாஜகான் கூறுகையில்’ முகூர்த்த தேதி போன்ற நாட்களில் மட்டுமே வெற்றிலை ஒரு பத்து ரூபாய் அதிகம் விற்கும். மற்ற நாட்களில் பெரிதளவில் வருமானம் இருக்காது.
ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டுமே இதில் நல்ல வருமானத்தைப் பார்க்க முடியும். தோட்டத்திற்கு வந்தேன் என்றால் மாலை 7 மணி ஆகிவிடும் வீட்டிற்குச் செல்ல. என்னிடம் 15 ஏக்கர் வெவ்வேறு இடங்களில் இருப்பதால் தினம்தோறும் வேலை இருந்து கொண்டே இருக்கும். 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வருமானம் தற்போது இல்லை. அதிக வெப்பநிலை காலநிலை மாற்றம் ஏற்படுவதால் வெற்றிலை கொடி கருகி விடுகிறது. மேலும் முன்பைவிட வெற்றிலை கொடியில் தற்போது நோய் தாக்குதல் என்பது அதிகரிக்க வருகிறது. இப்படிப் பல பிரச்சினைகள் இருந்தாலும் மனதிற்கு நிறைவாக இருக்கிறது. என் தோட்டத்திற்கு வந்து வேலையாட்களைச் சந்தித்து, புகழ்பெற்ற கும்பகோணம் வெற்றிலை சாகுபடியில் நானும் ஈடுபடுவதை மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறினார்.