நம் சமையலில் அடிக்கடி பயன்படுத்தப்படும் சோம்பு (Fennel), சுவையோடு மட்டுமல்லாமல் ஆரோக்கிய நன்மைகளையும் தரும் ஒரு அற்புதமான மசாலா பொருள். சோம்பு செடியை வீட்டிலேயே எளிதாக வளர்க்கலாம்.
முதலில் செம்மண் மற்றும் மக்கிய தொழு உரத்தை (compost) சம அளவில் கலந்து ஒரு மண்கலவை தயாரிக்க வேண்டும். அதில் சமையலுக்கு பயன்படுத்தும் சோம்பு விதைகளை தூவி, மேலே மெல்லிய மண் பரப்பி சிறிதளவு தண்ணீர் தெளிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் ஊற்றினால் விதைகள் அழியும், எனவே அளவோடு மட்டுமே ஊற்ற வேண்டும்.

5 முதல் 10 நாட்களுக்குள் முளைச்சல் தொடங்கும். சுமார் 60 நாட்களில் சோம்பின் இலைகள் நன்றாக வளரும்; இவை சிறிது கொத்தமல்லி இலைகளைப் போல தோற்றமளிக்கும். 100 நாட்களில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் மலரத் தொடங்கும். அதன்பின் 150 நாட்களுக்கு பின் சோம்பு காயத் தொடங்கும். முழுமையாக காய்ந்த பின் விதைகளை சேகரித்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.
இடையே அஸ்வினி பூச்சி, மாவு பூச்சி போன்றவை தாக்கினால், வேப்பெண்ணெய் கரைசலை வாரத்திற்கு மூன்று முறை தெளித்தால், செடி மீண்டும் ஆரோக்கியமாக வளரும். இவ்வளவு எளிமையான முறையில் இயற்கை சோம்பை வீட்டிலேயே வளர்த்து அதன் ஆரோக்கிய நன்மைகளை அனுபவிக்கலாம்.