தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் வெளி மாநிலத்தை சேர்ந்த ஆண்கள், பெண்கள் விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். கூலி குறைவு என்பதால் விவசாயிகளும் அதிக ஆதரவு தந்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களில் விவசாய பணிகளுக்கு ஆட்கள் பற்றாக்குறை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. இதைப் போக்கும் வகையில் ஒரிசா, மே. வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து இளைஞர்கள், பெண்கள் வயல் பணிகளுக்கு ஆண்டுதோறும் தஞ்சாவூர் திருவாரூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களுக்கு வருகின்றனர். இந்தாண்டும் சம்பா, தாளடி பணிகளுக்காக வடமாநில இளைஞர், பெண்கள் அதிக அளவில் வந்துள்ளனர்.
ஆட்கள் பற்றாக்குறை என்பதால் உள்ளூர் நாட்களுக்கு சம்பளம், கூலி உயர்ந்துள்ளது. அத்துடன் ஒப்பிடுகையில் வட மாநிலத்தவரின் சம்பளம் கூலி குறைவாக உள்ளதாக விவசாயிகள் கருதுகின்றனர். ஒரு ஏக்கர் நாற்றுப்பறிப்பு மற்றும் நடவுக்கு வட மாநிலத்தவர் ரூ. 4,500 சம்பளமாக பெறுகின்றனர். ஆனால் உள்ளூர் ஆட்கள் 6000 முதல் 7000 ரூபாய் வரை சம்பளம் பெறுகின்றனர்.
மேலும் காலை, மதிய உணவு, டீ, பலகாரம் என உள்ளூர் ஆட்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. அத்துடன் ஒப்பிடுகையில் வட மாநிலத்தவரின் சம்பளம், கூலி குறைவாக காணப்படுவதால் சாகுபடி செலவு குறைவதாக கூறப்படுகிறது. இதனால் விவசாயிகளும் வட மாநில ஆற்றலை விவசாய பணிகளில் ஈடுபடுத்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி, வண்ணாரப்பேட்டை உட்பட பல பகுதிகளில் கொல்கத்தாவை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் வயல்களில் நாற்று நடும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.