இந்தூர்: சையது முஷ்டாக் அலி டிராபி லீக் ஆட்டத்தில் தமிழக அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கர்நாடகாவிடம் தோல்வியடைந்தது. சையத் முஷ்டாக் அலி டிராபி கிரிக்கெட்டின் (‘டி20’) 17வது சீசன் இந்தியாவில் நடந்து வருகிறது.
லீக் சுற்றில் 5 குழுக்களாக மொத்தம் 38 அணிகள் விளையாடுகின்றன. இந்தூரில் நடைபெற்ற ‘பி’ குரூப் லீக் ஆட்டத்தில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் பேட்டிங் செய்த தமிழ்நாடு அணி 20 ஓவரில் 90 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வருண் சக்ரவர்த்தி (24), கேப்டன் ஷாருக் கான் (19), முகமது அலி (15) ஆறுதல் அளித்தனர்.
கர்நாடகா தரப்பில் வாசுகி கவுசிக், மனோஜ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். எளிதான இலக்கை துரத்திய கர்நாடகா அணி, மணீஷ் பாண்டே (42), கேப்டன் மயங்க் அகர்வால் (30) ஆகியோரின் உறுதுணையால், 11.3 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 93 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
தமிழக தரப்பில் குர்ஜப்னீத் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தமிழக அணி 5 ஆட்டங்களில் 2 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளுடன் ‘பி’ பிரிவில் 6வது இடத்தில் உள்ளது.