சென்னை: மடிப்பாக்கத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோவிலின் கும்பாபிஷேகம் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஏப்ரல் 11-ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து, ஸ்ரீ ஐயப்ப மண்டலி செயலர் ஆர்.மகாலிங்கம், ஸ்ரீ ஐயப்பன் கோயில் அறக்கட்டளை செயலர் ஆர்.வி. வீரபத்ரன் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:- மடிப்பாக்கத்தில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஐயப்பன் கோயில், சபரிமலை தந்திரி செங்கனூர் தாழமன் மடம் பிரம்மஸ்ரீ நீலகண்டரு தந்திரியால் ஜூன் 6, 1978 அன்று கட்டப்பட்டது.
இந்நிலையில், 47 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. மகா கும்பாபிஷேகம் நாளை மறுநாள் காலை 8.27 முதல் 9.57 மணிக்குள் நடக்கிறது. மகா கும்பாபிஷேகத்தை சபரிமலை பரம்பரை அர்ச்சகர்கள், செங்கனூர் தாழமன் மாதா பிரம்மஸ்ரீ கண்டரரு மோகனரரு தந்திரி மற்றும் பிரம்மஸ்ரீ மகேஷ் தந்திரி ஆகியோர் நடத்துகின்றனர்.

இந்நிகழ்வில் பந்தளம் மகாராஜா குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொள்ளவுள்ளனர். சபரிமலை ஐயப்பன் கோவிலில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகள், பூஜைகள் மற்றும் சடங்குகள் இந்த கோவிலில் பின்பற்றப்படுகின்றன. மேலும், மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோவில், சபரிமலைக்குப் பிறகு, புனித 18 படிகளில் ஸ்ரீ ஐயப்பன் அமர்ந்திருக்கும் முதல் கோவில் ஆகும். இக்கோயிலில் தினமும் தந்திரி முறையில் பூஜைகள் நடைபெறுகின்றன.
பக்தர்கள் இக்கோயிலை உத்தர சபரி கிரிசம் என்று அழைக்கின்றனர். கும்பாபிஷேக தினத்தன்று கேரளாவில் திருச்சூர் பூரம் திருவிழாவை போன்று 100 இசை கலைஞர்கள் பங்கேற்கும் செண்டை மேளம் இசை நிகழ்ச்சி நடைபெறும். கும்பாபிஷேக விழாவில் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.