பீஜிங்: திபெத்தில் உள்ள யார்லாங் சாங்போ நதியில் பிரம்மாண்டமான அணை கட்டும் பணியை சீனா அதிகாரப்பூர்வமாக தொடங்கியுள்ளது. இந்த நதி இந்திய எல்லைக்கு மிக அருகிலுள்ளதாலும், இந்தியா மற்றும் வங்கதேசம் போன்ற கீழேவாழும் நாடுகளுக்கு இந்த அணை திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என நீரியல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இந்த நதியே இந்தியாவின் பிரம்மபுத்திரா என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த திட்டம் கடந்த நான்கு ஆண்டுகளாக தாமதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கு சீன அரசு முழுமையான ஒப்புதலை வழங்கியுள்ளது. அணை கட்டும் பணியின் தொடக்க விழாவில் சீன பிரதமர் லி கியாங் நேரில் கலந்து கொண்டதுடன், அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக இது கருதப்படுகிறது. இந்தியா இந்த திட்டம் குறித்து கடந்த ஜனவரியில் தனது கடும் அதிருப்தியை சீனாவிடம் தெரிவித்திருந்தது.
மொத்த முதலீடு சுமார் 1.2 டிரில்லியன் யுவான் என மதிப்பிடப்பட்டுள்ள இந்த அணை திட்டத்தின் கீழ் ஐந்து பெரிய நீர்மின் நிலையங்கள் கட்டப்பட உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சீனா தனது மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் இருக்கிறது. ஆனால் அதன் விளைவாக, பிரம்மபுத்திரா நதியின் இயற்கை ஓட்டத்தில் மாற்றங்கள் ஏற்பட்டு, கீழேவாழும் நாடுகளில் நீர் பற்றாக்குறை, வேளாண் பாதிப்பு மற்றும் பருவமழை மாற்றம் போன்ற சூழ்நிலைகளை உருவாக்கும் அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில், இந்திய வெளியுறவு அமைச்சகம், பிரம்மபுத்திராவில் மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையும் இந்திய மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் செய்ய வேண்டும் என்று சீனாவிடம் வலியுறுத்தியுள்ளது. சர்வதேச ஒப்பந்தங்களை மதித்து, எல்லை நதிகளின் உரிமைகளில் சமநிலை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.