புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை தொடர் என்பதால் பழனி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் நேற்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
3 மணி நேரம் பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து வரிசைகளில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிஸ்கட் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கும் இடத்தில் பக்தர்களும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

ரோப் கார் மற்றும் வின்ச் ரயிலில் செல்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்கள் 2 மணி நேரம் வரை காத்திருந்தனர். பழனி அடிவாரம், சன்னிதி சாலை, பூங்கா சாலை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பழனியில் இருந்து மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட வெளியூர்களுக்கு செல்லும் பஸ்களிலும் கூட்டம் அலைமோதியது.