சென்னை: கடந்த 15-ம் தேதி மாலை திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நேற்று தொடங்கியது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையின் போது சபரிமலை யாத்திரை மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள், கார்த்திகை முதல் நாளில் மாலை அணிவித்து, 41 நாட்கள் விரதம் இருப்பர். இந்நிலையில் நேற்று கார்த்திகை மாதம் துவங்கியது. இதனை முன்னிட்டு ஐயப்பன் கோவில்களில் திரளான பக்தர்கள் மாலை அணிவித்து வழிபட்டனர்.
சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம், மகாலிங்கபுரம், அண்ணாநகர், மடிப்பாக்கம், புதுவண்ணாரப்பேட்டை உள்ளிட்ட அனைத்து அய்யப்பன் கோவில்களும் தயார் நிலையில் இருந்தன. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பக்தர்களின் வசதிக்காக சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பக்தர்களுக்கு குரு சுவாமிகள் மாலை அணிவித்தார். குழந்தைகள், முதியவர்கள், 10 வயதுக்குட்பட்ட பெண்கள், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாலை அணிவித்தனர். மாலை அணிந்த பக்தர்கள் அனைவரும் சாமியே சரணம் ஐயப்பா என கோஷமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர். சபரிமலைக்கு முதன்முறையாக வருபவர்கள் கருப்பு நிற ஆடையும், திரும்ப திரும்ப வருபவர்கள் காவி மற்றும் நீல நிறமும் அணிந்திருந்தனர்.
இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஐயப்பன் கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவித்து விரதத்தை தொடங்கினர். இதனால் கூட்டம் அலைமோதியது. இதனிடையே ஐப்பசி மாதம் முதல் மாலை அணிவித்து விரதம் இருந்த பக்தர்கள் தற்போது சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.