திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி சுவாமி கோவில் உள்ளது. வடக்கம்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் இந்த சுவாமி பெயரில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் ஓட்டல் நடத்தி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் தை மற்றும் மாசி மாதங்களில் முனியாண்டி சுவாமி கோவிலில் பிரியாணி திருவிழா நடத்துவார்கள்.
அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்றுமுன்தினம் காலை தொடங்கியது. இதனை முன்னிட்டு வடக்கம்பட்டி, அலங்காரபுரம், பொட்டல்பட்டி கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். பின்னர் சுவாமிக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில், 100-க்கும் மேற்பட்ட பெண்கள், பூத்தட்டு ஏந்தி, ஆடு, சேவல்களை ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமிக்கு அர்ச்சனை செய்தனர். பின்னர், சுவாமிக்கு மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

இதில், மதுரை, விருதுநகர் மற்றும் திருப்பூர், திருச்சி, சேலம் ஆகிய இடங்களில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் ஓட்டல் உரிமையாளர்கள், சென்னை, நெல்லை மற்றும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிமாநிலங்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சி நடைபெற்றது. நள்ளிரவில் இறைவனுக்கு பொங்கல் படைக்கப்பட்டது.
பின்னர் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 150 ஆடுகள், 300 சேவல்கள் பலியிட்டு சுவையான பிரியாணி தயார் செய்யப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முனியாண்டி சுவாமிக்கும், கருப்பசாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரியாணி பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பிரியாணி வாங்கிச் சென்றனர். கோவில் பிரியாணி பிரசாதம் சாப்பிட்டால் நோய் மற்றும் இறப்பு தடுக்கப்படும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கை.